இதுகுறித்து நரம்பியல் நிபுணர் விபில் குப்தா கூறுகையில், “சிலருக்கு மதிய வேளையில் தூங்குவது ‘ரீசெட் பட்டன்’ அழுத்துவதை போன்று புத்துணர்ச்சியை தரக்கூடியதாக அமையும். இதனால் புதுவித ஆற்றலோடு அன்றைய நாள் முழுவதிலும் அவர்கள் வழக்கமான பணிகளை செய்து முடிப்பார்கள். பகலில் பெரும்பாலும் யாரும் அசந்து தூங்குவதில்லை என்றாலும் கூட, இந்த சமயத்தில் உடல் சோர்வு முழுமையாக அகன்று விடும் என்று கூற முடியாது’’ என்று தெரிவித்தார்.
இதுகுறித்து MediBuddy ஆய்வு நிறுவனத்தின் மருத்துவ இயக்கக பிரிவின் தலைவர் கௌரி குல்கர்னி கூறும் போது, “நிச்சயமாக, குட்டி தூக்கம் தனிநபருக்கு பல வகைகளில் நன்மை அளிப்பதாக அமையும். உடல் சோர்வை குறைத்து, எண்ண ஓட்டத்தை மேம்படுத்தும். இது மட்டுமல்லாமல் செயல் திறன், நினைவுத்திறன் போன்றவற்றையும் மேம்படுத்தும்’’ என்று கூறினார்.
சுழற்சி அடிப்படையில் பணி செய்பவர்களுக்கு பலன் : வழக்கமான நேர வரைமுறைப்படி இல்லாமல், சுழற்சி முறையில் வெவ்வேறு நேரங்களில் பணி செய்யும் பணியாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இந்த பகல் நேர குட்டித் தூக்கம் அமையும் என்று மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. இது மட்டுமல்லாமல் பகல் நேரத்தில் தூங்குவதால் அலுவலகத்தில் பணித்திறன் மேம்படுகிறதாம்.
கொஞ்சம் எச்சரிக்கை தேவை : என்னதான் பகல் தூக்கம் நல்லது என்றாலும் கூட, அது நீண்ட நேரம் இருக்குமானால் அதுவே இரவு தூக்கத்தை கெடுப்பதற்கான வாய்ப்பாக அமைந்துவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து குல்கர்னி கூறுகையில், “தூங்குவது என்று முடிவு செய்துவிட்டால் 15 முதல் 20 நிமிடங்களுக்கு தூங்கினால் போதுமானது’’ என்று தெரிவித்தார்.
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் : பகல் நேரத்தில் தூங்குவது என்று முடிவு செய்துவிட்டால் சில எச்சரிக்கை செய்திகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக நாம் குறுகிய நேரத்திற்கு மட்டுமே தூங்க வேண்டும் என்பதை மனதில் வைத்து அலாரம் செட் செய்து கொள்ள வேண்டும். பகலில் தூங்குவதால் நமது இரவு நேர தூக்கம் தடைபடாது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.