உடலின் முக்கியமான பகுதிகளில் ஏற்படும் காயங்கள் எப்போதும் தீவிரமாக எடுத்து கொள்ளப்பட வேண்டும். அலட்சியப்படுத்தப்பட கூடாது. குறிப்பாக தலையில் காயம் ஏற்பட்டால் மருத்துவ கவனிப்பு அவசியம். இருப்பினும் தலையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவரின் உதவியை பெறுவதில் தாமதம் ஏற்பட்டால், எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஒருவர் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். பெரும்பாலான மூளைக் காயங்களுக்கு கால் அல்லது கைகளில் வெளிப்படை அறிகுறிகள் காணப்படுவதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போல சில மூளைக் காயங்களின் போது கை அல்லது கால்களில் சுளுக்கு அல்லது வலி உள்ளிட்ட சில அறிகுறிகள் தோன்ற கூடும். எனவே தலையில் அடிபட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெறுவது மிகவும் அவசியம்.
தலையில் ஏற்படும் காயம் : தலை காயம் என்பது உச்சந்தலை, மண்டை ஓடு, மூளை மற்றும் தலையில் உள்ள திசு மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் காயங்களை குறிக்கிறது. தலை காயங்கள் பொதுவாக மூளை காயம் அல்லது அதிர்ச்சிகரமான மூளை காயம் (TBI-traumatic brain injury) என குறிப்பிடப்படுகிறது. இது தலையில் ஏற்படும் காயம் அல்லது அதிர்ச்சியின் அளவை பொறுத்தது. மூளை காயங்கள் ஏற்பட தலையில் நேரடி அடி, விபத்து, உள் திசுக்களில் சேதம் போன்றவை சில காரணங்களாக உள்ளன.
ஆபத்து காரணிகள் மற்றும் யாருக்குக்கு அதிக ஆபத்து ஏற்படும்? பல அதிர்ச்சிகரமான மூளை காயங்கள் ஏற்பட காரணம் சாலை விபத்துக்கள் என்பதால் முதல் ஆபத்து காரணி கவனகுறைவு என்றாலும் பிற காரணிகள் ஒரு நபரின் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. குழந்தைகள், முதியவர்கள், மெல்லிய ரத்த நாளங்கள் மற்றும் சிறிய மூளை உள்ளவர்களுக்கு மூளை பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள். ஆஸ்பிரின் போன்ற ரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை எடுத்து கொள்பவர்கள் தலை காயம் காரணமாக கடும் சிக்கல்களை சந்திக்கும் ஆபத்தில் உள்ளனர். இவர்களுக்கு ரத்தம் எளிதில் உறையாது, மேலும் சிறு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால் கூட அதிக ரத்தம் வரும். அதே போல முதியவர்கள் குறிப்பாக டிமென்ஷியா மற்றும் பிற நினைவாற்றல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் தங்கள் அறிகுறிகளை விளக்க முடியாத குழந்தைகள் ஆகியோருக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. பல்வேறு வகையான தலை காயங்களில் மூளையதிர்ச்சி (Concussion), மண்டை எலும்பு முறிவு (Skull fracture), எபிடூரல் அல்லது சப்டுரல் ஹீமாடோமா, கன்ட்டியூஷன் ஆகியவை அடங்கும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை : தலையில் காயம் ஏற்படக்கூடிய அனைத்து சாத்தியங்கள் குறித்து நாம் எப்போதுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டில் நடக்கும் வழியில் கிடைக்கும் பொருட்களை ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும். பாய் மற்றும் விரிப்புகளை ஒழுங்காக வைக்க வேண்டும். தரையில் தண்ணீர் இருந்தால் அதை துடைக்கவும். பைக்கில் வெளியே செல்லும் போது & ஸ்கேட்டிங் செய்யும் போது ஹெல்மெட், காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணியுங்கள். ஒருவேளை தலையில் காயம் ஏற்பட்டால் அது சிறிய அல்லது பெரிய வீக்கமாக இருந்தாலும் மருத்துவரிடம் செல்லுங்கள். ஏனென்றால் நீங்கள் எந்த சிரமத்தையும் சந்திக்கவில்லை என்றாலும் கூட காயம் உங்களுக்கு தீங்கு செய்யவில்லை என்று அர்த்தமல்ல. ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டால், அவரை அசையாமல் பிடித்து கொண்டு சுத்தமான துணியை யன்படுத்தி காயத்தின் மீது லேசாக அழுத்தவும்.