ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் வெளியிட்டுள்ள ஒரு புதிய ஆய்வின்படி திருமணமான தம்பதிகளில் காணப்படும் கருவுறாமை பிரச்சனை உலகளவில் சுமார் 186 மில்லியன் மக்களை பாதித்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது. பொதுவாக நமக்கு வயதாகும் போது நம்முடைய உடலானது இனப்பெருக்க அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் உட்பட பல மாற்றங்களுக்கு ஆளாகிறது.
35 வயதிற்குப் பிறகு கருவுறுதல் விகிதம் குறைய தொடங்குவதால் வயது தொடர்பான கருவுறாமை சிக்கல் பெண்களில் ஒரு பொது கவலையாக உருவாகி இருக்கிறது. ஓவ்லேஷனில் சிக்கல், பிசிஓஎஸ், லூபஸ் மற்றும் கர்ப்பப்பை வாய் அசாதாரணங்கள் போன்ற தன்னுடல் தாக்க நோய்கள் உள்ளிட்டவை பெண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் காரணிகளில் சில.
ஆண்களை பொறுத்த வரை மிக குறைந்த அளவு டெஸ்டோஸ்டிரோன், குறைந்த விந்தணு எண்ணிக்கை மற்றும் சல்ஃபாசலாசைன் போன்ற சில ஓவர்-தி-கவுன்டர் மருந்துகள் குழந்தையின்மை பிரச்சனைக்கு வழிவகுக்கும். ஆண் அல்லது பெண் என யாராக இருந்தாலும் கருவுறுதலில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில பழக்கங்கள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன. நீங்களும் உங்கள் வாழ்க்கை துணையும் குழந்தைக்காக முயற்சிக்கிறீர்கள் என்றால் அதற்கான வாய்ப்புகளை குறைக்கும் கீழ்காணும் பழக்கங்களை முற்றிலும் தவிர்க்கவும்...
புகைப்பழக்கம் : புகைபிடித்தல் உயிரையே பறிக்கும் அளவிற்கு நம் ஆரோக்கியத்தில் பல பாதகமான கடும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. தவிர இந்த தீய பழக்கம் கருவுறுதலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. புகைபிடிக்கும் பழக்கம் இருக்கும் பெண்களுக்கு குறைந்த ovarian reserve இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இது பெண்களில் ஒட்டுமொத்த கருவுறுதல் மற்றும் கருத்தரிக்கும் திறனில் எதிர்மறைதாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதாவது கருத்தரிக்க கூடிய தரமான முட்டைகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. கூடுதலாக பெண்களில் காணப்படும் புகைபழக்கம் Gynaecological system-க்கு செல்லும் ரத்த விநியோகத்தை குறைப்பதால் கருமுட்டைகளின் தரம் பாதிக்கப்படுகிறது. தந்தையாக முயற்சிக்கும் ஆண்களும் புகைப்பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும் அல்லது படிப்படியாக குறைத்து கொள்ள வேண்டும்.
குடிப்பழக்கம் : இயல்பான அளவை விட அதிகமாக மது அருந்தும் ஆண்களும், பெண்களும் கருவுறுதலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மதுப்பழக்கம் ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியை சீர்குலைத்து, கணிக்க முடியாத பீரியட்ஸை ஏற்படுத்துகிறது. இதனால் ஓவலேஷனை கணிப்பது மிகவும் சவாலானதாகமாறுகிறது. குடிப்பழக்கம் உள்ள ஆண்களின் விந்தணு தரம் மற்றும் அளவு ஆகியவற்றில் கடும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி தந்தையாகும் வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது.
மோசமான டயட் : நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் ஹெல்தியான டயட் மிகவும் முக்கியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளையும் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ள உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வருவது ஒருவரின் கருவுறுல் விகிதத்தை மோசமாக பாதிக்கும். இந்த பழக்கங்கள் ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுப்பதோடு பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சீர்குலைத்து, கரு முட்டையின் தரத்தை குறைக்கும். மோசமான உணவு பழக்கங்கள் ஆண்களில் விந்தணுக்களின் தரத்தை குறைக்கும்.
உடற்பயிற்சியின்மை : ஆண், பெண் இருவருமே தங்கள் உயரத்திற்கு ஏற்ற சரியான எடையை பராமரிப்பது கருவுறுதலுக்கு மிக முக்கியமானது. எனவே ஆரோக்கியமான டயட்டை தவிர வழக்கமான உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மிக அவசியம். தினசரி 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வாக்கிங் செல்லலாம் அல்லது 45 நிமிடங்கள் ஒர்கவுட் செக்ஷனில் ஈடுபடலாம். அதிக எடை அல்லது உடல் பருமன் காரணமாக ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் கர்ப்பம் தரிப்பதை சவாலானதாக மாற்றுகிறது. தினசரி தவறாமல் செய்யும் உடற்பயிற்சிகள் இனப்பெருக்க உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது கருவுறுதலுக்கு அவசியமானது.
சுற்றுச்சூழல் : ஆண்களும், பெண்களும் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கு வெளிப்படும் போது கருவுறுதல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பூச்சிக்கொல்லிகள், பிளாஸ்டிக் மற்றும் க்ளீனிங் பொருட்கள் போன்றவற்றில் ரசாயனங்கள் அதிகம் இருக்கின்றன. இவற்றை அதிகம் பயன்படுத்தும் போது அவை உடலில் இருக்கும் ஹார்மோன் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி கர்ப்பம் தரிப்பதை கடினமாக்குகின்றன.
புகை, மது, போதுமான உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் உள்ளிட்ட பலவற்றால் கருவுறுதல் பாதிக்கப்படலாம். எனவே மேற்காணும் நடத்தைகளில் மாற்றங்களை செய்வது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். தவிர கருவுறாமைக்கான காரணத்தைக் கண்டறிந்து, கருவுறுதலை மேம்படுத்துவதற்கான உத்தியை சரியாக பின்பற்ற உரிய மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது மிக முக்கியம்.