ஆல்கஹால் குடிப்பதால் உண்டாகும் பக்க விளைவுகள் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், சிலர் தினமும் கொஞ்சமாக குடித்தால் எதுவும் ஆகாது, அளவிற்கு மீறினால் தான் நஞ்சு என நினைக்கிறார்கள். ஆனால், தினமும் ஒரு கிளாஸ் பீர் அல்லது ஒயின் குடித்தால் கூட இதய நோய், மார்பக புற்றுநோய் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
தினமும் ஆல்கஹாலை (alcohol) மீடியமாக குடிப்பவர்கள் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (Atrial fibrillation) ஏற்படும் அபாயத்தில் உள்ளனர், இந்த சிக்கல் வந்தால் உங்களின் இதயம் கண்ணாபின்னானு துடிக்கும். இதயத்துடிப்புக்கு ஒரு வரைமுறை இருக்காது. European Heart ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், தினமும் மது அருந்தாதவர்களுடன் மது அருந்துபவர்களை ஒப்பிடுகையில், தினமும் அருந்துபவர்கள் ஏறக்குறைய 14 ஆண்டுகளில் 'ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்' (Atrial fibrillation) எனும் நோயால் பாதிக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அது கிட்டத்தட்ட 16 சதவீதம் அதிகரிக்கலாம் என்று ஆய்வு தெளிவுப்படுத்தியுள்ளது. "இந்த கண்டுபிடிப்புகள் வழக்கமாக மது அருந்துபவர்களுக்கு முக்கியமானவை. இதயத்தை பாதுகாக்க 'ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் ஒயின்' ('one glass of wine a day'), என்று லே பத்திரிகை (lay press) சமீபத்தில் பரிந்துரைத்தது, ஆனால் ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் ஒயின் குடித்தாலும் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அபாயங்கள் மற்றும் சாத்தியமான நன்மைகளை சமநிலைப்படுத்தாமல் தனியார் நிறுவனங்கள் இது போன்று மக்களுக்கு பரிந்துரைக்கக்கூடாது என்றும் இதனால், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (Atrial fibrillation) உட்பட அனைத்து இதய மற்றும் இரத்த நாள நோய்கள் (all heart and blood vessel diseases)" ஏற்படலாம் என ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க்-எப்பென்டார்ஃப் (Hamburg-Eppendorf in Germany) பல்கலைக்கழக பேராசிரியர் & ஆராய்ச்சியாளர் ரெனேட் ஷ்னாபெல் (Renate Schnabel) கூறினார்.
1982 மற்றும் 2010ம் ஆண்டுக்கு இடைப்பட்ட நேரத்தில் ஆய்வில் சேர்ந்த 1,07,845 நபர்களின் மருத்துவ பரிசோதனைகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து அவர்களின் மெடிக்கல் ஹிஸ்டரி, வாழ்க்கை முறைகள் (medical histories, lifestyles), வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிலைகள் (employment and education levels) பற்றிய தகவல்களை வழங்கினர். இதில் மொத்த பங்கேற்பாளர்களில் பதிவுசெய்த 1,00,092 நபர்களுக்கு ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் அபாயம் இல்லை என்று நிரூபணமானது.
மேலும் அவர்களின் சராசரி வயது கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் (24 முதல் 97 வயது வரை) என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏறக்குறைய 14 ஆண்டுகளின் சராசரி பின்தொடர் காலத்தில், 5,854 பேர் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனை கொண்டிருந்தனர். ஆல்கஹால் குடிப்பதற்கும், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஆபத்துக்கும் இடையிலான தொடர்பு எல்லா வகையான மது பானங்களுக்கும் - வயது/பாலின வித்தியாசம் பாராமல் அனைவருக்கும் இந்த சிக்கல் ஏற்பட்டது. ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே ஆல்கஹால் உட்கொள்ளும் மக்களில் டீடோட்டலர்களுடன் (teetotalers) ஒப்பிடும்போது, ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஆபத்து 16 சதவீதம் அதிகரித்துள்ளது, என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் ஆல்கஹால் உட்கொள்வதால் ஆபத்து அதிகரித்துள்ளது. இதயம் மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படாமலிருக்க இந்த மது பழக்கத்தை இன்றே நிறுத்தி விடுங்கள். 'குடி குடியை கெடுக்கும்' என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தினமும் ஒயின் குடிப்பது நல்லதென பலரும் நம்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள். ஆனால் தற்போது வெளியான இந்த ஆய்வு குடிமகன்களிடமும் ஒயின் அருந்த பரிந்துரை செய்பவர்களிடையே நல்ல மாற்றத்தை கொண்டுவரும் என நம்புவோம்.