இன்றைய சூழ்நிலையில் பலருக்கும் சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களை உட்கொண்டால் ஒவ்வாமை ஏற்படும்.. சிலருக்கு அசைவ உணவுப் பொருட்களை உட்கொண்டாலோ அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொண்டாலோ ஒவ்வாமை பிரச்சனைகள் உண்டாகும். வேறு சிலருக்கோ பாலை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை உட்கொள்ளும் பட்சத்தில் அரிப்பு, எரிச்சல், வீக்கம் போன்று ஒவ்வாமை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதைப் போலவே நாம் உடலில் உள்ள புரதச்சத்தை அதிகரிக்க உட்கொள்ளும் நட்ஸ் வகைகளினாலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக நிலகடலை போன்று நட்ஸ் வகைகளை உட்கொள்ளும் பட்சத்தில் பலருக்கும் ஒவ்வாமை பிரச்சனைகள் உண்டாகிறது. ஆனால் குழந்தைகள் பிறந்து நான்கிலிருந்து ஆறு மாத காலத்திற்க்குள்ளாகவே அவர்களுக்கு பீனட் பட்டர் கொடுப்பதன் மூலம் இந்த ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பை கணிசமாக குறைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இவ்வாறு குழந்தைகள் பிறந்து ஆறு மாதத்திற்குள்ளாகவே அவர்களுக்கு பீனட் பட்டரை உணவில் அறிமுகப்படுத்துவதன் மூலம் உலக அளவில் இதனால் ஏற்படும் ஒவ்வாமை விகிதத்தை 77% வரை குறைக்க முடியும் என அவர்கள் கூறுகின்றனர். ஆரம்பத்தில் மிகவும் மென்மையான பீனட் பட்டர் அவர்களின் உணவில் சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பீனட் பட்டரை குழந்தைகள் பிறந்து ஆறு மாதத்திற்குள்ளாகவே உணவில் சேர்த்து விட வேண்டும். ஒரு வருடம் கழித்து அவர்களுக்கு பீனட் பட்டரை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒவ்வாமை குறையும் வாய்ப்பானது 33 சதவீதம் தான் இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் குழந்தைகள் பிறந்து ஒரு வருடம் முடிவதற்குள்ளாகவே அவர்களுக்கு ஒவ்வாமை பிரச்சனைகள் ஏற்பட்டு விடுகின்றன.
நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலமானது நிலக்கடலைகளில் உள்ள புரதச்சத்தை உடலுக்கு தீங்கிழைக்கும் ஒன்றாக கருதி ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகள் பிறந்து ஆறு மாதத்திற்குள்ளாகவே அவர்களுக்கு பீனட் பட்டரை உணவில் சேர்க்கும்போது, ஒவ்வாமை உண்டாகும் வாய்ப்பானது வெகுவாக குறைக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒவ்வாமைக்கான அறிகுறிகள்:பீனட் பட்டர் உட்கொண்டதும் அரிப்பு, எரிச்சல், உதடுகளில் வீக்கம், மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டால் உங்களுக்கு நிலக்கடலைகளால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்று பொருள். மேலும் அனாபிலாக்சிஸ் எனப்படும் ஒவ்வாமையினால் உயிருக்கே கூட ஆபத்தாகலாம். எனவே உடனடியாக மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.
சிகிச்சை முறை:முதலில் இவ்வாறு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் உடல் நிலையும், தன்மையும் வெவ்வேறு விதமானது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எந்தவிதமான ஒவ்வாமையினால் நோயாளி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை முறையை அளிக்க வேண்டும். இமியோனோ தெரபி எனப்படும் ஒவ்வாமைக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி செயல்படுவதை குறைக்கும் சிகிச்சை முறையை மேற்கொள்ளலாம். அல்லது சிலர் வெறும் ஒவ்வாமையினால் ஏற்படும் அறிகுறிகளை குறைக்கும் சிகிச்சை முறையை மேற்கொண்டால் மட்டுமே போதுமானது.