நாம் இன்னும் உணவு மற்றும் கடைப்பிடிக்கும் உணவு முறைகளால் சில வகை புற்றுநோய்கள் வருகின்றன என்பதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. உலக புற்றுநோய் ஆய்வு மையம் அண்மையில் நடத்திய ஆய்வின்படி வயிற்று புற்றுநோய் தொடர்பான பல விஷயங்கள் தெரிய வந்துள்ளன. இந்தியாவில் அதிகம் ஏற்படக் கூடிய புற்றுநோய்களில் 4ஆம் இடத்தில் வயிற்று புற்றுநோய் இருக்கிறது.
அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வது : அதிகமாக உப்பு சேர்க்கப்பட்ட பொருட்கள் மற்றும் ஊறுகாய் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை புற்றுநோயை வரவழைக்கின்றன. குறிப்பாக வயிறு சார்ந்த புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. நாள்தோறும் நமது உணவில் சேர்த்துக் கொள்ளும் சோடியத்தின் அளவானது 2,300 மில்லி கிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு ஆய்வு மையம் அறிவுறுத்துகிறது.
உணவில் கிருமித்தொற்று : ஹெச். பைலோரி என்னும் பாக்டீரியா மூலமாக உணவு நஞ்சாக மாறுவதும் வயிற்று புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் சராசரியாக 50 முதல் 80 சதவீத மக்களுக்கு இந்த தொற்று பாதிப்பு இருக்கிறது. உணவு கலப்படம் காரணமாக புற்றுநோய் மற்றும் கேஸ்ட்ரிடீஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் ஹெச் பைலோரி பாக்டீரியாவானது உப்பில் உயிர் வாழக் கூடியது. அதிக உப்பு சேர்த்துக் கொள்வதாலும் நாம் இந்தப் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.
சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி : பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் சிவப்பு இறைச்சி போன்ற உணவுகளை தினசரி குறைவான அளவில் எடுத்துக் கொண்டாலும் கூட மலக்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கு 20 சதவீதம் வாய்ப்பு உள்ளது. உலக சுகாதார நிறுவனமும் இத்தகைய எச்சரிக்கையை உறுதி செய்துள்ளது. இறைச்சியை அதிக வெப்பத்தில் சமைக்கும்போது, அதில் நடைபெறும் நொதிகளானது நமது செல்களை பாதிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் பதப்படுத்திய உணவுகள் : தொழிற்சாலைகளில் பிரித்தெடுக்கப்பட்ட உணவு பொருட்களாலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது. உதாரணத்திற்கு செயற்கை இனிப்பூட்டிகள், நிறமூட்டிகள் மற்றும் சோடா குளிர்பானங்கள், பாக்கெட் செய்யப்பட்ட நொறுவை தீனிகள், குளிரூட்டப்பட்ட பீட்ஸா, இனிப்புகள் போன்றவை வயிற்று புற்றுநோய்க்கு அச்சாரமாக அமைகின்றன.
உணவில் சேர்க்கப்படும் மூல பொருட்கள் : பேக்கேஜிங் செய்கின்ற உணவுகளிலும், பதப்படுத்துகின்ற உணவுகளிலும் சேர்க்கப்படுகின்றன சில வகை மூல உணவுப் பொருட்கள் புற்றுநோய் மட்டுமல்லாமல் இதய நோய், டைப் 2 நீரிழிவு போன்ற நீண்டகால பிரச்சினைகளை ஊக்குவிக்கின்றன. பல்முனை நோய் தாக்குதலில் உயிரிழப்பை ஏற்படுத்தவும் இவை காரணமாக அமைகின்றன.