வாயு பிரச்சனை என்பது பலரும் சந்திக்கும் பொதுவான மற்றும் சங்கடமான சுகாதார பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. பெரும்பாலும் நம் உடலின் செரிமான செயல்முறையில் ஏற்படும் சிக்கல்களால் பலருக்கும் வாயு தொல்லை ஏற்படுகிறது. பொது வெளியில் பலர் முன்னிலையில் வாயு தொல்லையால் அவதிப்படுவது என்பது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சங்கடமானது. வயிற்றில் ஏற்படும் வாயு தொல்லை வயிற்றுப் பிடிப்புகள், வீக்கம், கனமாக உணர வைப்பது மற்றும் நெஞ்செரிச்சல் உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கிறது. அடிக்கடி வாயு தொல்லையால் அவதிப்படுவோர் தங்கள் டயட்டில் சில எளிய மாற்றங்கள் செய்தாலே நிவாரணம் கிடைக்கும்.
ஓமம்: அஜ்வைன் என்று குறிப்பிடப்படும் ஓமம் வாயு தொல்லைகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் நிவாரணம் அளிக்கிறது. ஓம விதைகளில் உள்ள தைமால் (Thymol) என்ற கலவை, செரிமானத்திற்கு உதவும் சாறுகளை இரைப்பை வெளியிட தூண்டுகிறது. மேலும் வாயுவால் ஏற்படும் வயிறு வலிக்கான நிவாரணத்தையும் ஓமம் அளிக்கிறது. வாயு தொல்லையை சரி செய்ய தினமும் ஒரு நாளைக்கு ஒரு முறை ஒரு டீஸ்பூன் ஓம விதைகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.
பெருங்காயம்: வயிற்றில் அதிகப்படியான வாயுவை உருவாக்க கூடிய குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும் வாயு எதிர்ப்புப் பொருளாக செயல்படுகிறது பெருங்காயம். பல சுகாதார நிபுணர்கள், ஜீரணிக்க கடினமான உணவுகளில் கட்டாயம் பெருங்காயம் சேர்க்க பரிந்துரைக்கின்றனர். பெரும்பாலான வயிறு பிரச்சனைகளுக்கு உடனடியாக நிவாரணம் தருவதாக உள்ளது பெருங்காயம். வாயுவால் எப்போது அசௌகரியம் ஏற்பட்டாலும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் பெருங்காயம் கலந்து குடிப்பது உடனடி நிவாரணம் தரும். பெருங்காய நீரை அதிகம் குடித்தால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
சீரகம்: இரைப்பை அல்லது வாயு பிரச்சனையை எதிர்கொள்ளும் நேரத்தில் உங்களுக்கு மற்றொரு சிறந்த வீட்டு வைத்தியமாக இருக்கிறது சீரக தண்ணீர். சீரகத்தில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் உமிழ்நீர் சுரப்பிகளை தூண்டி உணவை சிறந்த முறையில் ஜீரணிக்க உதவுகிறது. மேலும் அதிகப்படியான வாயு வயிற்றில் உருவாவதை தடுக்கிறது. 2 கப் தண்ணீரில் 1 டேபிள்ஸ்பூன் சீரகம் கலந்து சில நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின் இதை ஆற வைத்து வடிகட்டி குடிக்கலாம்.
லெமன் சோடா: அதிகப்படியான வாயுவை குறைக்க நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட மற்றொரு எளிய தீர்வு லெமன் சோடா. 1 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் மற்றும் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் தண்ணீரில் கலந்து உணவு சாப்பிட்டு முடித்த பிறகு குடிக்க வேண்டும். லெமன் சோடாவை குடித்தவுடன் கார்பன் டை ஆக்சைடை உருவாகி செரிமான செயல்முறையை எளிதாக்குகிறது.
திரிபலா : மூலிகை பவுடரான திரிபலா இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. வாயு தொல்லை மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்வதில் பெரிதும் உதவுகிறது. அரை டீஸ்பூன் கொதிக்கும் நீரில் 5-10 நிமிடங்கள் திரிபலா பவுடரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின் நன்கு ஆற வைத்து வடிகட்டி தூங்க செல்லும் முன் குடித்து வந்தால் வாயு உட்பட பல வயிற்று கோளாறுகள் சரியாகும். இவை தவிர உடல் இயக்கத்தை அதிகரித்து. உடற்பயிற்சிகளை பின்பற்றுவது உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாயு பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.