உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சி அவசியமானது என்பதை பலரும் உணர்ந்துள்ளனர். அந்த வகையில் காலை அல்லது மாலை வேளைகளில் நடைபயிற்சி அல்லது எளிமையான உடற்பயிற்சிகளை பலரும் செய்கின்றனர். அதே சமயம், நீண்ட கால ஆரோக்கியத்திற்கு இதய நலனும் மிக முக்கியமானதாகும். மிகச் சரியான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமாக இதய நோய்கள் உருவாகுவதை தடுக்கலாம்.
இதயத்திற்கான உடற்பயிற்சி ஏன் அவசியமானது.?
ஒவ்வொரு நபருக்கும் வயது அதிகரிக்கும் போது, இதயம் சார்ந்த நோய்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன. இத்தகைய சூழலில் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். உடலுக்கு நன்மை பயக்கும் ஹெச்டிஎல் கொழுப்பு அதிகரிக்கும். மன அழுத்தம் குறைவதுடன், இதயத்தில் இருந்து ரத்த ஓட்டத் திறன் மேம்படும்.
இன்டர்வெல் டிரெயினிங்: அவ்வபோது குறுகிய கால இடைவெளியில் மிக தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யும் முறை இது. போதிய நேரமின்மையுடன் இருக்கக் கூடிய நபர்களுக்கு சிறந்த வாய்ப்பாக இது இருக்கிறது. மிக தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யும்போது நமது இதயம் மற்றும் நுரையீரல் ஆகிய இரண்டின் நலமும் மேம்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற உடற்பயிற்சிகளுக்கு வழிகாட்டுவதற்கு பல்வேறு ஆப்-கள் இருக்கின்றன. அவற்றை டவுன்லோடு செய்தும் பயன்பெறலாம்.
வெயிட்லிஃப்டிங்: கொஞ்சம் நேரம் எடுத்து, மெதுவாக செய்யக் கூடிய உடற்பயிற்சி இது. அதே சமயம், நமது இதய துடிப்பு மற்றும் இதயம் பலம் பெறுவதற்கு உதவிகரமாக இருக்கிறது. இந்தப் பயிற்சியை செய்யும்போது ஸ்ட்ரோக் அல்லது ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 40 முதல் 70 சதவீதம் வரை குறைகிறது. அதே சமயம், வெயிட்லிஃப்டிங் எப்படி செய்வது என்பது குறித்து பயிற்சியாளர்களிடம் இருந்து முறையான ஆலோசனைகளை பெற்று, அதன்படி பயிற்சி செய்வது அவசியமாகும்.
நடைபயிற்சி: எல்லோரும் பொதுவாக செய்யக் கூடிய மிக எளிமையான உடற்பயிற்சி இதுவாகும். நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் இதை இலகுவாக மேற்கொள்ள இயலும். நடைபயிற்சி என்பது வேகம் குறைவான பயிற்சி தான் என்றாலும் கூட, வேகமான நடைபயிற்சியை செய்யும் போது இதயநலன் அதிகரிக்கிறது. நடைபயிற்சி செய்யும் போது கைகளில் ஏதேனும் எடையுள்ள பொருள் ஒன்றை தூக்கியபடி நடந்து செல்வது இன்னும் சிறப்பான பலன்களை கொடுக்கும்.