உடல் ஆரோக்கியத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகிறோமோ?, அதே அளவிற்கு மன ஆரோக்கியத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளவை, குறிப்பாக மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம், அளவுக்கு அதிகமான பயம், மனக்குழப்பம் போன்ற மனநலக்கோளாறுகள் உடல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைவது கண்டறியப்பட்டுள்ளது.
பணமும், புகழும் இருந்தால் மனதில் எந்த கவலையோ, குழப்பமோ இருக்காது, மகிழ்ச்சியாக இருக்கலாம் என நினைப்பவர்கள் உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைவருக்கும் உண்டு, அதற்கான அளவுகோல்கள் மட்டுமே மாறுகிறது. மக்கள் மத்தியில் பிரபலங்கள் என்றாலே ஸ்டைலிஷான வாழ்க்கை முறை, கோடிகளில் குவியும் சம்பளம், மாஸ் வரவேற்பு ஆகியவை தான் தோன்றும். உண்மையில் பிரபலங்களாக இருப்பவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட சோசியல் மீடியா மற்றும் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு வகையான நெகட்டீவ் இமேஜை உருவாக்கிவிடக்கூடும். எனவே பிரபலங்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் துறை சார்ந்த விஷயங்களை பேலன்ஸ் செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர். தற்போது எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் மனதை ரிலாக்ஸாகவும், அனைத்தையும் இயல்பாகவும் கடந்து செல்வது குறித்து விராட் கோலி முதல் சாருக்கான் வரை பலரும் தெரிவித்துள்ள மனநலம் சம்பந்தமான கருத்துக்களை அறிந்து கொள்ளலாம்...
விராட் கோலி: உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் வீரர், விளையாட்டு மற்றும் விளம்பரம் மூலம் கோடிகளில் வருமானம், அழகான மனைவி மற்றும் குழந்தை என அனைத்தும் இருக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி 2019ம் ஆண்டு மன அழுத்தம் குறித்து பேசியது முக்கியமானது. என் கேரியரில் இதுபோல ஒரு காலக்கட்டத்தை நான் கடந்திருக்கிறேன். உலகமே முடிந்துவிட்டது போல் உணர்ந்தேன். 2014 ஆண்டு இங்கிலாந்தில் என்ன செய்வது, யாரிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது, பிறரை எப்படி தொடர்புகொள்வது என்று கூட எனக்குத் தெரியவில்லை” என இந்தூரில் பங்களாதேஷுக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர் கூட்டத்தில் பேசியிருந்தார்.
தீபிகா படுகோனே: பாலிவுட்டின் இளவரசி என ரசிகர்களால் கொண்டாடப்படும் தீபிகா படுகோனே மன அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் ஆவார். ”மன அழுத்ததிற்காக நான் முதலில் மருந்துகள் மற்றும் சிகிச்சை எடுத்துக்கொள்ள மறுத்தேன். ஆனால் இங்கு மனநல பிரச்சனைகளுக்கு பெரிய அளவிலான கெட்டப்பெயர் உள்ளது. எனவே நான் முழுவதுமாக குணமாகி வெளிவரும் வரை மருந்துகளை எடுத்துக்கொண்டே” என தெரிவித்துள்ளார்.
டெமி லொவாடோ: அமெரிக்க நடிகை, பாடகி, பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட டெலி லொவாடோவும் மன அழுத்தம் குறித்து ஓபனாக பேசியுள்ளார். கடுமையான மனநிலை மாற்றமான பைபோலார் டிஸ்ஆர்டர் என்ற மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறித்து மனம் திறந்துள்ளார்.
“மக்கள் என்னை பைபோலார் பிரச்சனைகள் பாதிக்கப்பட்டவள் என சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக என்னை அந்த நோயினை வைத்து அடையாளம் காட்டுவதை ஒருபோதும் நான் விரும்பவில்லை. அது எனக்குள் ஏற்பட்ட ஒரு பிரச்சனை, அதற்காக அதையே என்னுடைய அடையாளமாக பார்க்கக்கூடாது” என தெரிவித்துள்ளார்.
சானியா மிர்ஷா: தோல்வி, பாகிஸ்தான் வீரருடன் காதல் மற்றும் திருமணம் என பல சர்ச்சைகளில் சிக்கி மீண்ட டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷா, “மன அழுத்தத்தின் போது நான் கண்ணீர் விட்டு அழுதேன். ஒரு மாதத்திற்கு மேல் சாப்பாடுவதற்காக கூட எனது அறையை விட்டு வெளியே வராமல் இருந்ததாக நியாபகம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
செலினா கோமஸ்: ஹாலிவுட் நடிகை, பாடகி என கின்னஸ் சாதனை வரை புகழ் பெற்ற செலினா கோமஸும் மன அழுத்தம் குறித்து மனம் திறந்துள்ளார். “பெண்களாகிய நாம், வலுவாகவும் கவர்ச்சியாகவும், மென்மையாகவும், அமைதியாகவும் இருக்கக் கற்றுக் கொடுக்கப்படுகிறோம்; பெண் என்பதாலேயே நாம் எளிதில் உடைந்து போக அனுமதிக்கப்படுவதையும் உணர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
ஷாருக்கான்: பாலிவுட்டின் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானும் ஒரு கட்டத்தில் தான் மன அழுத்தத்திற்கு ஆளானதாக பேசியுள்ளார்.
“தோள்பட்டை காயம் மற்றும் வலியின் காரணமாக நான் மிகுந்த மனச்சோர்வு அடைந்தேன். ஆனால் இறுதியாக நான் அதிலிருந்து வெளியேறிய போது, திருப்தியாகவும், வழக்கத்தை விட அதிக ஆற்றலுடனும் உணர்ந்தேன்” என தெரிவித்துள்ளார்.