கொரோனா அபாயம் நீடிக்கும் இந்த நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நாட்டில் ஏராளமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் கோவிட் தொற்று அதிகரிக்கும் அபாயம் இருப்பதை கருத்தில் கொள்வது இன்னும் அவசியமாகும். எனவே நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் உடல் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் மற்றும் சரியான மருந்துகளை தொடர்ந்து எடுத்து வர வேண்டும், மேலும் டயட்டில் செய்யப்படும் மாற்றங்கள் மூலம் பாதிக்கப்பட்ட நபரின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் என்பது மருத்துவர்களின் நம்பிக்கை.
நீரிழிவு நோயுடன் வாழ்பவர்கள் சத்து பற்றாக்குறை இருப்பதாக உணர வேண்டியதில்லை. உணவை சமநிலைப்படுத்தவும், ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடவும் செய்யலாம். சர்க்கரை மற்றும் மாவுச்சத்துள்ள கார்போஹைட்ரேட் என இந்த இரண்டு உணவு வகைகளும் ரத்த சர்க்கரையின் அளவை உயர்த்தும் என்றாலும், இந்த உணவுகளை ஒரு சீரான உணவு திட்டத்தின் ஒரு பகுதியாக சரியான அளவு சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
சிறுதானியங்கள்: சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் குறைகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க இவை உதவுகின்றன என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. சிறுதானியங்கள் அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளது. மேலும் சிறுதானியங்கள் அதிகப்படியான நார்ச்சத்துடன் ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. இதிலிருக்கும் நார்ச்சத்து வேகமாக செரிமானம் ஆவதற்கு உதவும். தினசரி உணவின் ஒரு பகுதியாக சிறுதானியங்களை எடுத்து கொண்ட நீரிழிவு நோயாளிகள் ரத்த குளுக்கோஸ் அளவு 12-15% (சாப்பிடுவதற்கு முன் மற்றும் பின்) குறைவது ஆய்வில் தெரிய வந்தது. அதே போல அவர்களின் ரத்த குளுக்கோஸ் அளவு நீரிழிவு நோயிலிருந்து முன் நீரிழிவு நிலைக்கு சென்றதும் கண்டறியப்பட்டது.
பாதாம்: நாளொன்றுக்கு 2 முறை பாதாம் சாப்பிடுவது குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு, கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். தினசரி பாதம் சாப்பிட்டு வருவதால் நீரிழிவு நோய்க்கு முந்தைய கட்டத்தில் ரத்த சர்க்கரை அளவை மேம்படலாம். இது நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்க அல்லது தாமதப்படுத்த உதவும்.
பச்சை இலை காய்கறிகள்: பச்சை இலைகளை கொண்டகாய்கறிகளில் அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன. கீரை, காலே, முட்டைக்கோஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளை நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சேர்த்து கொண்டால், அது அவர்களின் ரத்த சர்க்கரை அளவை இயல்பான அளவில் வைத்திருக்க உதவுகின்றன. காய்கறிகளை ஜூஸ் போட்டு குடிப்பது மிகவும் நல்லது, மேலும் பச்சையாக அல்லது சிறிது வேகவைத்த வெஜிடபிள் சாலட்களில் அனைத்து சத்துகளும் அப்படியே இருக்கும் என்பதால் இவற்றையும் சாப்பிடலாம்.
சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் பழங்கள் நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளதால் ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சை போன்றவற்றை சாப்பிடலாம். அமெரிக்க நீரிழிவு சங்கம் நீரிழிவு சூப்பர் ஃபுட்களில் சிட்ரஸ் பழங்களை பட்டியலிட்டுள்ளது. இதன் கூற்றுப்படி, ஆரஞ்சு, திராட்சைப்பழம் மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் நிறைந்தவை, இது ஆரோக்கியமான நீரிழிவு உணவு திட்டத்திற்கு பயனளிக்கும்
பெர்ரிக்கள்: அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்சத்து மற்றும் பிற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துக்கள் ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிகளில் காணப்படுகின்றன. இவை குறைந்த glycemic index, கொண்டுள்ளன. இவற்றை அடிக்கடி நீரழிவு நோயாளிகள் சாப்பிடுவது நல்லது.
வெந்தயம் : நார்ச்சத்து நிறைந்த வெந்தயம், பொதுவாக வகை 2 நீரிழிவு நோயுடன் தொடர்புடைய வளர்சிதை மாற்ற அறிகுறிகளை மேம்படுத்த உதவுகிறது. இது செரிமானத்தை மெதுவாக்குவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. எனவே தினமும் ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் சாப்பிடுவது நீரழிவு நோயின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.