பல பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சங்கடமான அறிகுறிகள் இருக்கும். எனவே அவர்கள் மாதத்தின் அந்த நாட்களை எண்ணி பெரும் பயம் கொள்கிறார்கள். மாதவிடாய் நேரத்தில் பெண்கள் உடலில் ஹார்மோன் அளவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். எனவே அவர்களின் மனநிலை பெரும் மாற்றங்களை சந்திக்கும். எரிச்சல், வலி மற்றும் அமைதியின்மை போன்ற பல அசௌகரிய உணர்வுகள் மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ஏற்படுகிறது. மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் உடல் மற்றும் மனநிலை மாற்றத்தால் பலர் உணவை உண்பதில் அசௌகரியமாக உணர்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் குறுகிய காலத்தில் அதிக அளவு உணவை உட்கொள்கிறார்கள்.
வைட்டமின் சி அடங்கிய பழங்கள் மற்றும் காய்கறிகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை மாதவிடாய் நேரத்தில் எடுப்பது சிறந்த பலனை தரும். ஆற்றல் குறைவாக மற்றும் சோர்வாக உணரும் போது வைட்டமின் சி தேவையான ஆற்றலை உடலுக்கு வழங்கும். எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் மற்றும் ப்ரோக்கோலி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் வைட்டமின் சி-யால் நிறைந்துள்ளன. இவற்றை சாப்பிடுவதன் மூலம் தேவையான அளவு வைட்டமின் சி பெற்று மாதவிடாய் வலி மற்றும் அறிகுறிகளை எதிர்த்து போராடலாம்.
சர்க்கரை நிறைந்த பழங்கள்: மாதவிடாய் நேரத்தில் பெரும்பாலான பெண்கள் எப்போதும் இனிப்பை விரும்புவார்கள். சிலர் சாக்லேட்டை அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால் கிவி, தர்பூசணி, பிளம்ஸ், செர்ரி, திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் போன்ற இயற்கை சர்க்கரை நிறைந்த பழங்களை தேர்வு செய்வது பசியை தணிப்பதோடு கூடுதலாக உடலுக்கு நீர்சத்து மற்றும் ஆற்றலை வழங்குகின்றன.
காய்கறிகள்: மாதவிடாய் நேரத்தில் ரத்த போக்கு காரணமாக ஏற்படும் தலைச்சுற்றல் மற்றும் சோர்வை போக்க, நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்த பச்சை காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். கீரை, ப்ரோக்கோலி, காலிஃபிளவர், கேரட், பட்டாணி போன்ற காய்கறிகள் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் நிறைந்தவை. இது சோர்வை எதிர்த்துப் போராட உதவும்.
ஹைட்ரேட்டாக இருப்பது அவசியம்: மாதவிடாய் காலத்தில் உடலில் நிறைய தண்ணீர் இருப்பது அவசியம். நிறைய தண்ணீர் குடிப்பது வலியை குறைக்கவும், வீக்கம் ஏற்படுவதையும் தடுக்கும். மாதவிடாயின் போது ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது, வீக்கம் மற்றும் பிடிப்புகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.