நாம் உண்ணும் உணவு மற்றும் நாம் கடைப்பிடிக்கும் வாழ்வியல் முறை ஆகியவை தான் நமது ஆரோக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. குறிப்பாக, பெரும்பாலான மக்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு உணவே காரணமாக இருக்கிறது. மேற்குறிப்பிட்ட நோய்கள் அதிகரிக்கும்போது, அதன் எதிரொலியாக ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரெஸ்ட் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கார்டியாக் அரெஸ்ட் மற்றும் அது சார்ந்த மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய சூழலில் நமது உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகள் மற்றும் உடலில் கெட்ட கொழுப்பான எல்டிஎல் அளவுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவு முறை அவசியம் என்று குறிப்பிடுகின்றனர்.
ஓட்ஸ் : தொடர்ந்து 4 வாரங்களுக்கு ஓட்ஸ் சாப்பிட்டால் உடலில் குறிப்பிடத்தக்க அளவுக்கு கெட்ட கொழுப்புகள் கரைந்துவிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினசரி 25 முதல் 35 கிராம் அளவுக்கு ஓட்ஸ் எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையுமாம். மிகுந்த நார்ச்சத்து உடைய ஓட்ஸ் என்பது, நம் உடலின் கொழுப்புச்சத்து உறிஞ்சும் நடவடிக்கையை தடுக்கிறது.
முழு தானியங்கள் : பார்லி, சிறு தானியங்கள், ஓட்ஸ் போன்ற அனைத்து விதமான தானியங்களில் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, இதய நலனை மேம்படுத்தும். இது மட்டுமல்லாமல் முழு தானியங்களை நாம் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மெடபாலிஸ நடவடிக்கைகள் ஆகியவை மேம்படும்.