பெண்களுக்கு மாதவிடாய் என்பது மாதத்திலேயே மிகவும் கடுமையான நாட்கள் ஆகும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி மற்றும் மனச்சோர்வு காரணமாக பெண்கள் உணவை தவிர்ப்பதால் உடல் நிலை மேலும் பலவீனமடைகிறது. இதனால் ஒழுங்கற்ற ரத்தப்போக்கு ஏற்பட்டு, பெண்களின் மன அழுத்தத்தையும், ஆரோக்கியத்தையும் மேலும் மோசமாக்கிறது.
இந்திய பெண்களில் 33 சதவீதம் பேருக்கு மாதவிடாய் காலத்தில் ஒழுங்கற்ற இரத்தப்போக்கு ஏற்பட, மன அழுத்தம், தவறான உணவுப்பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவை காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மாதத்தின் 3 அல்லது 5 நாட்கள் ஏற்படும் மாதவிடாயின் போது பெண்கள் சீரான ரத்தப்போக்கைப் பெற ஒழுங்காக சாப்பிட வேண்டும். எனவே தான் மாதவிடாய் காலத்தில் சீரான ரத்தப்போக்கை தூண்ட உதவும் 5 உணவுகளின் பட்டியலை கொடுத்துள்ளோம்.
1. வெல்லம்: பாட்டி, அம்மா போன்றவர்கள் மாதவிடாய் காலத்தில் உடல் வெப்பத்தை அதிகரிக்க கூடிய பொருட்களை அதிகம் சாப்பிட சொல்லி அறிவுறுத்துவார்கள். அவர்கள் சொல்வது போல் சூட்டைக் கிளப்பக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்வது உதிரப்போக்கை அதிகரிக்க உதவும். மாதவிடாய் காலத்தில் சீரான ரத்தப்போக்கை உருவாக்குவதில், வெல்லம் சிறப்பாக பங்காற்றுகிறது. வெல்லத்தில் அதிக அளவிலான இரும்புச்சத்து இருப்பதால் இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.
மாதவிடாயின் போது சீரான ஓட்டத்தைப் பெற, வெல்லத்துடன் சிறிது இஞ்சி, எள், மஞ்சள் தூள், சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்தோ அல்லது ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்தோ நன்றாக மென்று குடிக்கலாம். மாதவிடாய் காலத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க பீரியட்ஸ் தேதிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த வீட்டு வைத்தியத்தை செய்யலாம்.
2.மஞ்சள்: மஞ்சள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஒரு சிறந்த இயற்கை வீட்டு மருந்தாக செயல்படுகிறது. வெதுவெதுப்பான பாலுடன் கலந்து, மஞ்சள் பாலாக குடிக்கலாம் அல்லது மஞ்சள் லட்டு செய்து சாப்பிடலாம். மஞ்சளை உட்கொள்வதால் வயிற்றிற்குள் உருவாகும் சூடானது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி மாதவிடாய் கால ரத்தப்போக்கை சீராக்க உதவுகிறது. மேலும் மஞ்சளில் உள்ள ஆண்டிஸ்பாஸ்மோடிக் மாதவிடாய் காலத்தில் வயிற்றில் ஏற்படும் வலியை சரி செய்யவும் உதவும்.
3. அன்னாச்சி பழம்: அன்னாசிப்பழத்தில் காணப்படும் ப்ரோமெலைன் என்ற என்சைம், மாதவிடாய் சுழற்சியைத் தூண்டி, கருப்பைச் சுவர்களின் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. இந்த என்சைம் தசைகளை தளர்த்துகிறது, மேலும் மாதவிடாய் காலத்தில் அன்னாசிப்பழம் சாப்பிடுவது பீரியட்ஸ் நேரத்தில் வயிற்றில் ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது. அன்னாச்சி பழத்தில் உள்ள மெக்னீசியம், மாதவிடாய் காலத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மாதவிடாய் நாட்கள் முழுவதும் அன்னாசிப் பழச்சாற்றைப் பருகினால், ரத்தப்போக்கு சீராக இருப்பதை உணர முடியும்.
4. சாக்லேட்: மாதவிடாய் காலத்தில் வலி மற்றும் சோர்வுடன் போராடும் பெண்களுக்கு சாக்லேட் ஒரு சிறந்த நிவாரணியாகும். சாக்லேட்டில் உள்ள அதிக மெக்னீசியம் கருப்பையின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது. இந்த வைட்டமின் நிறைந்த உணவில் தாமிரம், புரதம் போன்ற தாதுக்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது மாதவிடாய் உதிரப்போக்கை சீராக்க உதவுகிறது.
5. பப்பாளி: உடல் உஷ்ணத்தை அதிகரித்து மாதவிடாயின் போது ரத்தப்போக்கை சீராக்க உதவும் உணவுகளில் பப்பாளிக்கு என்று தனி இடம் உண்டு. ஏனெனில் அதன் வெப்பம் மாதவிடாய் ரத்த ஓட்டத்தை சீராக்குவதற்காக கருப்பை தசை நார்களை சுருக்குகிறது. பப்பாளியில் உள்ள செறிவான கரோட்டின், மாதவிடாய் காலத்தைத் தூண்டுவதற்கு அல்லது அதைத் தடுக்க உதவுகிறது. மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு ஒருநாள் முன்னதாக பப்பாளி பழம் சாப்பிடுவது சீரான ரத்தப்போக்கை உருவாக்க உதவும்.