பலருக்கும், உடலின் அடிப்படை செயல்பாடுகள் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே வருகிறது. குறிப்பாக நமது வாழ்க்கை முறை உடல் செயல்பாட்டை முழுவதுமாக மாற்ற கூடியதாக உள்ளது. அதே போன்று நாம் சாப்பிடும் உணவுகளும் உடலின் மெட்டபாலிசத்தை பாதிக்கும் அளவிற்கு உள்ளன. நாம் எடுத்து கொள்ளும் உணவின் அளவும், அதன் ஆரோக்கிய தன்மையும் தான் இவற்றை நிர்ணயிக்கின்றன. இது குறித்த பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி ஹார்வர்ட் ஹெல்த் நடத்திய ஆய்வின்படி, மனது உடல் ஆற்றலை விரிவாக்கவும், கலோரிகளை எரிக்கும் விகிதமாக மெட்டபாலிசம் என்கிற வளர்சிதை மாற்றம் உதவுகிறது. சிலருக்கு விரைவான வளர்சிதை மாற்றங்கள் இருக்க கூடும். அவர்கள் எடை அதிகரிக்காமல் மற்றவர்களை விட அதிகமாக சாப்பிட முடியும். ஆனால்,மற்றவர்களுக்கு இது போன்று இருப்பதில்லை. பலருக்கும் வளர்சிதை மாற்ற விகிதம் மெதுவாக நடைபெறுகிறது. இது தான் உடலின் செயல்பாட்டை குறைக்கிறது. எந்தெந்த உணவு வகைகள் உடலின் மெட்டபாலிசத்தை குறைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரொட்டி/பாஸ்தா/பீட்சா
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறீர்கள் என்றால், ரொட்டி, பாஸ்தா அல்லது பீட்சா போன்ற மைதாவால் தயாரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக அளவு குளுட்டன், மாவுச்சத்து மற்றும் பைடிக் அமிலம் உள்ள உணவுகளை உட்கொள்வதால் உங்கள் மெட்டபாலிசத்தை பாதிக்கலாம். மேலும் இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன, இது கூடுதல் கொழுப்பு சேமிப்பிற்கு வழிவகுக்கிறது.
மது
அதிக வேலை உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கழித்து ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பது நிவாரணமாக இருக்கலாம். ஆனால் ஒரே முறையில் அதிகமாக மது அருந்துவது தான் உங்களின் உடல் செயல்பாட்டை பாதிக்க கூடும். பெண்கள் 1 கிளாசுக்கு மேலும், ஆண்கள் இரண்டிற்கு மேல் உட்கொண்டால், அது மெட்டபாலிசத்தை பாதிக்கும். பல ஆராய்ச்சியின் படி, ஆல்கஹால் உடலின் கொழுப்பை எரிக்கும் திறனை 73 சதவீதம் குறைக்கும் என்று அறியப்பட்டுள்ளது.
உறைந்த உணவுகள்
உறைந்த உணவுகளில் சர்க்கரை, சோடியம் மற்றும் டிரான்ஸ் கொழுப்பு போன்றவை நிறைந்துள்ளன. நீண்ட நாட்கள் ஒரு உணவு பொருள் கெடாமல் இருக்க இவற்றை அதில் சேர்க்கின்றனர். மேலும் இழந்த சுவையை ஈடுசெய்வதற்கு சேர்க்கப்படும் இவை, உங்கள் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். எனவே இந்த வகை உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.
வறுத்த உணவு
பொதுவாக அதிகமாக வறுத்த அல்லது பொறித்த உணவுகள் உடலுக்கு பல சிக்கல்களை உண்டாக்கும். எனவே தினமும் எண்ணெயில் வறுத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளின்படி, வறுத்த உணவுகளை உண்பதால் வயிற்றுப் பருமன் மற்றும் எடை கூடுதல் அபாயம் அதிகரிக்கலாம்.