நம் உடலின் செயல்திறன் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கும், நாம் உண்ணும் உணவுக்கும் நேரடி தொடர்பு உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். எனினும், சாப்பிடும் உணவை பொருத்து தூக்கத்தின் தரம் கெடும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? வயிறு முட்ட சாப்பிட்டால் தூக்கம் சொக்கிக் கொண்டு வரும் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம், இது என்ன புது தகவலாக இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? என்னென்ன விஷயங்களால் நம் தூக்கம் கெடும் என்று இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் தூக்கமின்மை பிரச்னை உருவாகுமா? : தூக்கமின்மை பிரச்சினை ஒவ்வொன்றும் மற்ற பிரச்சினைகளுடன் தொடர்புடையவை. Obstructive Sleep Apnea (OSA) என்னும் பிரச்சினை காரணமாக மூச்சுப்பிரச்சினை ஏற்படும். ஆழ்ந்த உறக்கம் உறங்க முடியாது. சிலருக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதுடன், இறப்பு கூட நேரிடலாம். இந்த ஓஎஸ்ஏ ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் உடல் பருமன் ஆகும்.உடல் பருமனுடன் இருப்பவர்கள் மது அருந்துவதால் இந்த நிலைமை இன்னும் மோசம் அடைகிறது. மது தசைகளை ரிலாக்ஸ் செய்யும் நிலையில், தூக்கத்தின்போது மேல்நோக்கிய காற்றுப்பாதையில் தடை ஏற்படும். இந்த ஓஎஸ்ஏ பிரச்சினையை தவிர்க்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிகமாக காஃபி அருந்துவது : சாப்பிட்டவுடன் சூடான காஃபி அருந்தும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. அப்படி அருந்தாவிட்டால் உணவே செரிக்காததை போல தோன்றும். ஆனால், தூங்குவதற்கு முன்பு காஃபி அருந்தினால், மூளையின் தூக்கத்திற்கு கட்டளையிடக் கூடிய ரசாயனங்களின் உற்பத்தியை அது தடுத்துவிடும். காஃபி அருந்திய 6 மணி நேரத்திற்கு அதன் தாக்கம் ரத்த நாளங்களில் இருக்கும். ஆகவே, காஃபி அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
அதிகமாக சாப்பிடக் கூடாது : இரவில் நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும். ஆகவே, தூங்க செல்வதற்கு முன்பாக நாம் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. வயிறு நிரம்ப சாப்பிட்டால் ஆசிட் ரிஃப்ளெக்ஸ், அசிடிட்டி, செரிமானக் கோளாறுகள் போன்ற பிரச்சினை ஏற்படும். கொழுப்பு, மசாலா நிறைந்த உணவுகளை இரவில் தவிர்க்கவும்.
சர்க்கையை குறைத்துக் கொள்ள வேண்டும் : சர்க்கரையின் பயன்பாடு அதிகமாக இருந்தால் அது நேரடியாக ரத்த சர்க்கரை அளவை பாதிக்கும். நம் உடலுக்கு தேவையான ஆற்றல்களை சர்க்கரை தான் தருகிறது என்றாலும், இதை மிகுதியாக எடுத்துக் கொள்ளும்போது நாம் சோர்ந்து போகவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், இது தூக்கத்தின் தரத்தையும் கெடுத்துவிடும்.