ஆரோக்கியமான வாழ்விற்கு எப்போதும் ஊட்டச்சத்து மிக உணவுகளை சாப்பிடுவது நம் அனைவருக்கும் முக்கியமானது. ஆனால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் உணவு தேவைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திலும் கர்ப்ப கால உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கர்ப்பிணிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தொற்றுகளை தடுக்க உதவும் குளிர்கால உணவுகளின் பட்டியல் இங்கே...
யோகர்ட் : வயிற்றில் வளரும் கருவின் வளர்ச்சி மற்றும் அதன் உடல் அமைப்பை உருவாக்க கால்சியம் அவசியம் தேவைப்படுவதால், பெண்களுக்கு அவர்களின் கர்ப்பகாலத்தில் வழக்கத்தை விட அதிக கால்சியம் நுகர்வு தேவைப்படுகிறது. யோகர்ட்டில் இருக்கும் அதிக கால்சியம் உள்ளடக்கம் வயிற்றில் உள்ள கருவின் உடல் கட்டமைப்பை வளர்க்க பெரிதும் உதவுகிறது. கருவிலுள்ள குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும், இதயம், நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாட்டிற்கும் கால்சியம் இன்றியமையாதது. தவிர யோகர்ட்டில் அடங்கி இருக்கும் நல்ல பாக்டீரியா வயிற்று வலி மற்றும் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
முட்டை : புரோட்டீன் ஹவுஸ் என்று குறிப்பிடப்படும் முட்டைகளில் போதுமான புரோட்டீன் மட்டுமல்ல, எலும்புகளை வலுவாக்க உதவும் கோலின், லுடீன், வைட்டமின்கள் பி12 மற்றும் டி, ரிபோஃப்ளேவின் மற்றும் ஃபோலேட் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துகள் அடங்கி இருக்கின்றன. வயிற்றில் இருக்கும் குழந்தையின் எலும்பு, தசை மற்றும் மூளை வளர்ச்சிக்கு முட்டைகள் பெரிதும் உதவுகின்றன. இருப்பினும் கர்ப்பமாக இருக்கும்போது சமைக்காத பச்சை முட்டைகளை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மீன்கள் : கர்ப்ப காலத்தில் வீக்கத்தை குறைக்க மற்றும் நோயெதிர்ப்பு செல்களை ஆக்டிவேட் செய்ய உதவும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், DHA மற்றும் EPA ஆகியவற்றின் சிறந்த மூலமாக சால்மன், டுனா, கானாங்கெளுத்தி மற்றும் ஹெர்ரிங் போன்ற மீன் வகைகள் இருக்கின்றன. மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஃபேட்டி ஃபிஷ் எனப்படும் கொழுப்பு மீன்கள் ஜிங், செலினியம், வைட்டமின் டி உள்ளிட்டவற்றின் சிறந்த இயற்கை ஆதாரமாக இருக்கின்றன.
நட்ஸ் : ஊட்டச்சத்து மிக்க மீன்கள் போன்ற அசைவ உணவுகளை சாப்பிடாத கர்ப்பிணிகளுக்கு அக்ரூட் பருப்புகள், பாதாம், முந்திரி, பிஸ்தா, பெக்கன்ஸ், பிரேசில் நட்ஸ் மற்றும் பேரீச்சம்பழங்கள் போதுமானவை. இவற்றில் தாவர நார்ச்சத்து, இயற்கை சர்க்கரைகள், வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நிரம்பியுள்ளன. கர்ப்பிணிப் பெண்களுக்கு இரும்பு சத்து இன்றியமையாதது. ஒருசில உலர் பழங்கள் ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. மேலும் உலர் பழங்களில் நிறைந்துள்ள நார்ச்சத்து கர்ப்பிணிகளுக்கு பொதுவாக ஏற்படும் மலச்சிக்கலை சரி செய்ய உதவுகிறது.
இனிப்பு உருளைக்கிழங்கு : வைட்டமின் ஏ உற்பத்தியை அதிகரிக்க கர்ப்பிணிகள் தங்கள் டயட்டில் இனிப்பு உருளைகிழங்கை சேர்ப்பது சிறந்த வழியாகும். வைட்டமின் ஏ-வை தயாரிக்க நம் உடல் பயன்படுத்தும் பீட்டா கரோட்டின் என்ற தாவர கலவை இதில் அதிகம் உள்ளது. வயிற்றில் வளரும் குழந்தையின் உயிரணுக்களின் வளர்ச்சிக்கும், உயிரணு மற்றும் திசு வேறுபாட்டிற்கும் வைட்டமின் ஏ முக்கியமானது. எனவே இதன் பயன்பாட்டை கரிப்பிணிகள் 10 - 40 சதவீதம் வரை அதிகரிக்க அறிவுறுத்துகிறார்கள்.
பச்சை காய்கறிகள் : குளிர்காலத்தில் ஃபிரெஷ்ஷான் ப்ரோக்கோலி, கீரை வகைகள் மற்றும் பச்சை காய்கறிகள் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை கர்ப்பிணிகள் தங்கள் டயட்டில் சேர்க்க வேண்டும். இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஏ, கால்சியம், இரும்பு, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பல முக்கிய சத்துகள் அடங்கி இருக்கின்றன. குழந்தை பிறக்கும் வயதுடைய பெண்களுக்கு தினமும் 0.4 மிகி ஃபோலிக் ஆசிட் தேவைப்படுகிறது.
உணவு வகைகள் : குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு ஃபோலேட் மிகவும் தேவைப்படும் முக்கிய ஊட்டச்சத்து ஆகும். கருத்தரித்த குறிப்பிட்ட சில நாட்களுக்கு பிறகு நரம்புக் குழாய் குறைபாடுகள் ஏற்படுவதிலிருந்து ஃபோலிக் ஆசிட் தடுக்கிறது. நட்ஸ், பீன்ஸ், சிட்ரஸ் பழங்கள், பச்சை காய்கறிகள், வலுவூட்டப்பட்ட காலை உணவு தானியங்கள், குறிப்பிட்ட வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ்கள் மூலம் ஃபோலிக் ஆசிட்டை ஈசியாக பெறலாம்.
பயறு வகைகள் மற்றும் பீன்ஸ் : புரோட்டீன், ஃபைபர் , மினரல்ஸ், இரும்பு மற்றும் பைட்டோ கெமிக்கல்களின் நல்ல மூலமாக பருப்பு & பயறு வகைகள் மற்றும் பீன்ஸ்கள் இருக்கின்றன. புதிதாக குழந்தை பெற்றிருக்கும் தாய்மார்கள் குழந்தைக்கு ஆரோக்கியம் நிறைந்த தாய்ப்பால் கொடுக்க பீன்ஸ், பருப்பு, பாசிப்பருப்பு, பட்டாணி மற்றும் வேர்க்கடலை உள்ளிட்டவற்றை தங்கள் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.
பெர்ரிக்கள் : பெர்ரிக்கள் வைட்டமின் சி-யின் அற்புதமான மூலமாகும். வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க உதவுகின்றன. இவற்றில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதோடும குளிர்காலத்தில் அடிக்கடி ஏற்படும் சுவாச தொற்றுகளை தடுக்க உதவுகின்றன. பெர்ரிக்களில் இருக்கும் பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் குளிர் காலத்தில் கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.