அதிவேகமாக சுழன்று கொண்டிருக்கும் இயந்திரத் தனமான வாழ்க்கையில் நாமும் மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அடுத்துதடுத்து வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். அதனால், நம்மை நாம் பார்த்துக் கொள்ளவே நேரம் இருக்காது. மிக அதிகமான பணி, கொஞ்சம் கூட ஓய்வில்லாத சூழல் ஆகியவை காரணமாக, அன்றைய நாளின் இறுதியில் நீங்கள் மிகவும் சோர்வாக உணர்வீர்கள். ஆனால், இதுவே தொடரும் பட்சத்தில் எப்போதும் நீங்கள் சோர்வுடன் களையிழந்து காணப்படுவீர்கள். இத்தகைய சூழலில், உங்கள் உடலுக்கும், மனதுக்கும் போதுமான புத்துணர்ச்சி கிடைப்பதற்கான டிப்ஸ் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
நல்ல தூக்கம் : தூக்கத்தைப் போன்ற சிறந்த மருந்து வேறெதுவும் கிடையாது. நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 மணி நேரம் வரையில் எந்தத் தொந்தரவுகளும் இன்றி நீங்கள் தூங்கி எழுந்தால், உங்கள் உடல் அசதி குறைவது மட்டுமல்லாமல், மனமும் புத்துணர்ச்சி அடையும். எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதை காட்டிலும், எந்த தொந்தரவுகளும் இன்றி எந்த அளவுக்கு சிறப்பாக தூங்குகிறோம் என்பதே முக்கியமானது.
நீங்கள் தனிமை விரும்பி என்றால், கொஞ்சம் தனிமையை தேடுங்கள் : பார்ப்பவர்கள் எல்லோரிடமும் படபடவென பேசும் பழக்கம் உடையவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறரிடம் பேசுவதன் மூலமாகவே அவர்களது மனதில் உள்ள பாரங்கள் குறைந்து விடும். ஆனால், நீங்கள், கொஞ்சம் தனித்து இருக்க விரும்புவர் என்றால், பிறரோடு இருக்கும் சமயங்களில் உங்களால் புத்துணர்ச்சியை உணர முடியாது. ஆகவே, ஒரு நாளில் சிறிது நேரத்தை ஒதுக்கி உங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளவும்.
மன அழுத்தத்தை குறைக்கவும் : இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் இது மாபெரும் பிரச்சினையாக இருக்கும். மன அழுத்தம் என்பது பொதுவான ஒன்றுதான் என்றாலும் கூட, அதுவே மிக அதிகமானது என்றால் உங்கள் மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படக் கூடும். குறிப்பாக, அவ்வபோது தலைச்சுற்றல் பிரச்சினை ஏற்படும். ஆகவே, ஒவ்வொரு நாளும் உங்கள் மன அழுத்தம் வெளியேற்றப்படுவதை உறுதி செய்யுங்கள்.
ஏதேனும் ஒரு பழக்க வழக்கத்தை கடைப்பிடிக்கலாம் : நீங்கள் வேலை செய்வதால் எந்த அளவுக்கு களைப்பு அடைகிறீர்கள் என்பது ஒரு பிரச்சினையே அல்ல. உங்கள் மனதுக்கு பிடித்தமான ஒன்றை செய்யும்போது சோர்வு நீங்கி விடும். மனதுக்கு இதமான மியூஸிக் கேட்கலாம், படங்கள் வரையலாம் அல்லது எழுத்து மீது ஆர்வம் கொண்டவர் என்றால் சமூக வலைதளங்களில் எழுதலாம்.