உங்கள் மெட்டபாலிசத்தை (வளர்சிதை மாற்றத்தை) அதிகமாக வைத்திருப்பது உடல் எடையை குறைக்கவும், எடை கூடாமல் தடுப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் தினமும் நன்றாக சாப்பிட்டாலும் கூட நாளின் முடிவில் எனர்ஜி இல்லாதது போல இருக்கிறதா.! உடல் எடை எளிதாக அதிகரிக்கிறது ஆனால் எடையை குறைக்க எவ்வளவு முயற்சி எடுத்தாலும் பலன் கிடைக்கவில்லையா.! இதற்கெல்லாம் மோசமான வளர்சிதை மாற்றம் காரணமாக இருக்கலாம். மெட்டபாலிசம் என்பது உணவை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராசஸ் ஆகும்.
எனவே நம்முடைய வளர்சிதை மாற்ற விகிதம் (metabolic rate) மிகவும் மெதுவாக இருந்தால் எடை அதிகரிக்க மற்றும் எப்போதும் சோர்வாக உணர வழிவகுக்கும். வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க விரும்பினால் முதலில் உங்கள் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும் வகையிலான தவறுகள் என்னென்னெ செய்கிறீர்கள் என்பதை ஆராய வேண்டும். உங்கள் உடலில் மோசமான வளர்சிதை மாற்றத்திற்கு பங்களிக்கும் சில பொதுவான தவறுகளை இங்கே காணலாம்.
கலோரி குறைபாடு: டயட்டில் மிக குறைந்த கலோரிகளை எடுத்து கொள்வது வளர்சிதை மாற்றத்தில் பெரும் குறைவை ஏற்படுத்தும். எடை இழப்புக்கு குறைவான கலோரி எடுத்து கொள்ள வேண்டும் என்றாலும் கூட, கலோரி உட்கொள்ளலை குறைக்க நீங்கள் உண்ணும் உணவை திடீரென்று குறைப்பது, உங்கள் உடல் நீங்கள் செய்வதை உணர்ந்து மெதுவான விகிதத்தில் கலோரிகளை எரிக்க வழிவகுக்கிறது. எனவே நீங்கள் வெயிட் லாஸ் செய்யும் முயற்சிகளில் இருந்தால் கலோரி உட்கொள்ளலை குறைக்கலாம் தவறில்லை, ஆனால் உடலமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவிற்கு குறைக்க கூடாது.
புரோட்டீன் குறைவாக சாப்பிடுவது: ஆரோக்கியமான எடையை அடைய மற்றும் பராமரிக்க போதுமான புரோட்டீன் சாப்பிடுவது மிகவும் முக்கியம். செரிமானத்திற்குப் பிறகு ஏற்படும் வளர்சிதை மாற்றத்தின் அதிகரிப்பு உணவின் வெப்ப விளைவு (TEF) என்று அழைக்கப்படுகிறது.புரோட்டீனின் வெப்ப விளைவு கார்போஹைட்ரேட்டுகள் அல்லது கொழுப்பை விட அதிகமாக உள்ளது. கார்போஹைட்ரேட்டுகளுக்கு 5-10% மற்றும் கொழுப்பிற்கு 3% அல்லது அதற்கும் குறைவாக இருப்பதை ஒப்பிடும் போது புரோட்டீன் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை தற்காலிகமாக 20-30% அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எனவே புரோட்டீன் நிறைந்த உணவுகள் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்கிறது.
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது: நீங்கள் சுறுசுறுப்பாக இருந்தால் மட்டுமே உங்கள் உடலும் சுறுசுறுப்பாக இருக்கும். உடற்பயிற்சிகள் எதுவும் இல்லாமல் இருப்பது வளர்சிதை மாற்ற விகிதத்தை குறைப்பதால் உங்களை சோர்வாக உணர வைக்கிறது. எனவே ரன்னிங், சைக்கிளிங், வாக்கிங் அல்லது ஜிம்மிற்குச் செல்வது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: நீங்கள் உங்கள் டயட்டில் என்ன சேர்க்கிறீர்கள் என்பதே உங்களது ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்யும். ஆரோக்கியமான உணவுகளை உண்பது உங்கள் உடலை வலுப்படுத்தி, நோய்களில் இருந்து பாதுகாக்கும். மாறாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் பல நோய்களுக்கு வழிவகுப்பதோடு அதிகப்படியான கொழுப்பு மற்றும் உப்பு / சர்க்கரையை உட்கொள்ள செய்கிறது.