இந்தியர்களின் உணவுக் கலாசாரத்தில் அரிசி உணவை தவிர்த்துவிட்டு, ஒரு அத்தியாத்தை நாம் எழுத முடியாது. குறிப்பாக, தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் அன்றாடம் தவறாமல் இடிப்பது அரிசி. வேக வைத்த சாதம் ஆகட்டும், இட்லி, தோடை, இடியாப்பம் ஆகட்டும் அல்லது பொறி, பொறி உருண்டை போன்ற ஸ்நாக்ஸ் ஆகட்டும் அனைத்துக்கும் அடிப்படை அரிசி தான்.
ஆனால், என்ன செய்வது அரிசி மிகுந்த சத்தானது என்றாலும்கூட, மிக அதிகப்படியான மாவுச்சத்து கொண்டிருப்பதால், சர்க்கரை நோயாளிகள் இதனை பெரிதும் தவிர்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, மாறி வரும் வாழ்க்கைச் சூழல் மற்றும் அதிகமான உடல் இயக்கம் அல்லது உடற்பயிற்சி செய்யாத இளைய தலைமுறையினரும்கூட, அரிசி உணவை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எல்லோரும் வாங்கக் கூடிய விலையில் விற்பனை ஆகுவது, நம்மை பசியாற வைப்பது, உடலுக்கு தேவையான கலோரிகளை அதிகப்படியாக வழங்குவது போன்ற காரணத்தால், அரிசி உணவு என்பது இன்றியமையாத ஒன்றுதான். ஆனால், கால மாற்றத்திற்கு ஏற்ப, அதை நாம் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, அதற்கு ஈடான வேறு சில உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம்.
கோதுமை : இந்தியர்கள் அனைவரது சமையல் அறைகளிலும் தவறாமல் இடம்பெற்றிருக்கும் பொருள்களில் ஒன்றாக கோதுமை இருக்கிறது. அரிசிக்கு மாற்றான உணவுப் பொருள்களில் இது பெரும் பங்கு வகிக்கிறது. கிச்சடி, உப்புமா போன்ற வகைகளில் இதை சாப்பிடலாம். இதில் மெக்னீசியம், மேங்கனீஸ், ஃபோலேட், இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்றவை நிரம்பியுள்ளன.
காலிஃபிளவர் : கொஞ்சம் வேகவைத்த அரிசியுடன், காலிஃபிளவர் ஏராளம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு அரை கப் சாதம் சாப்பிடும்போது உங்களுக்கு 100 கலோரிகள் கிடைக்கிறது என்றால், காலிஃபிளவர் அரை கப் சாப்பிடும்போது 13 கலோரிகள் மட்டுமே கிடைக்கும். இதனால், அதிக உடல் உழைப்பு இல்லாத மக்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.