கோவிட் வைரஸ் பரவலுக்குப் பிறகு நாள் முழுவதும் மாஸ்க் அணிந்து கொண்டு இருப்பது இன்றியமையாததாகிவிட்டது. உடற்பயிற்சி மற்றும் வேலை செய்யும்போது மாஸ்க் அணிந்திருப்பது என்பது அசௌகரியமாக இருக்கிறது. குறிப்பாக மாஸ்க் போட்டுக்கொண்டு உடற்பயிற்சி செய்யும்போது, மூக்கு வழியே சூடாக காற்று வருவதை உணர முடியும். இதனால், மாஸ்க் அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்தால் உடலில் வெப்பநிலை அதிகரிக்கும் என கருதப்பட்டது. மேலும், இதயத்துடிப்பும் அதிகரிக்கும் என யூகிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்த ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக்கம் நடத்திய ஆய்வில் நான்கு விதமான முகக் கவசங்கள் பரிசோதிக்கப்பட்டன. அறுவை சிகிச்சை மாஸ்க், என்.95, ஸ்போர்ட்ஸ் மாஸ்க், கழுத்துவரை மூடப்பட்டிருக்கும் கெய்டர் ஆகிய மாஸ்குளை ஆய்வுக்குட்படுத்தினர். மாஸ்க் அணிந்திருப்பவர்கள், மாஸ்க் இல்லாமல் இருப்பவர்கள் என இரு குழுக்கள் இடையே தனித்தனியே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவுகள் ஸ்போர்ட்ஸ் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் 90 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை உள்ள சூழலில் நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செய்தனர். அதில், முகக்கவசம் அணிந்தவர்கள் மற்றும் அணியாதவர்களிடையே, உடலில் குறிப்பிடப்படும் அளவிலான வெப்பநிலை அதிகரிப்பு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
ஆய்வில் ஈடுபட்ட அயாமி யோஷிரா பேசும்போது, "இந்த ஆய்வுக்கு முன்புவரை மாஸ்க் அணிந்து கொண்டு உடற்பியற்சி செய்யும் நபருக்கு கூடுதல் மன அழுத்தத்தம் ஏற்படுமா? அல்லது வெப்பநிலையை அதிகரிக்குமா? என்பது உறுதியாக தெரியாமல் இருந்தது. மாஸ்க் அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்யும்போது, உடலில் வெப்பநிலை அதிகரித்து வேகமான இதயத்துடிப்புக்கு வழிவகுக்குமா? என்பது கேள்வியாக இருந்தது. இதனை தெளிவாக கண்டறிய முகமூடிக்கு உள்ளே மற்றும் வெளியே ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை அளவிடும் சென்சார்களைப் பொருத்தினோம். விளையாட்டு முக்கவசம் அதிகளவிலான வியர்வை துளிகள் மற்றும் நீராவிகளை உறிஞ்சியது.
அதேநேரத்தில், முகக்கவசம் அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்வது அசௌகரியமாகவும், வெப்பநிலையையும் அதிகரிக்கிறது என பலரும் தெரிவித்ததற்கு மாறாக, ஆய்வு முடிவுகள் இருந்தது. மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சியில் ஈடுபடும்போது ஏற்படும் அசௌகரியம், வெப்பநிலை மற்றும் இதயத்துடிப்புக்கு இடையே எந்த உறவும் இல்லை என்பதை நாங்கள் உறுதி செய்தோம்" எனத் தெரிவித்தார். சுற்றுப்புறத்தில் இருக்கும் அதிக வெப்பம் காரணமாக இத்தகைய அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் ஆய்வில் ஈடுபட்ட யோஷிரா தெரிவித்தார்.