கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்க மாஸ்க் அணிவது கட்டாயம் என்பது பலரும் அறிந்ததே. அதை தவிர்க்கவும் முடியாது. இருப்பினும் நீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் பலரும் பல பக்கவிளைவுகளை சந்திக்கின்றனர். அதாவது மாஸ்க் தடையங்கள், பல் வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர். அந்த வகையில் தற்போது கண்கள் எரிச்சல் கொடுப்பது புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதோடு அரிப்பு, கண்கள் வறண்டு போதல் போன்ற பிரச்னைகளையும் சந்திக்கின்றனர்.
இந்த கண் எரிச்சல் மஸ்கை சரியான முறையில் அணியவில்லை, ஃபிட்டான மாஸ்கை அணியவில்லை என்றால் வரும் என்கின்றனர். அதாவது மாஸ்க் அணியும்போது வெளியில் விடும் மூச்சின் வெப்பம் மேல் நோக்கி பரவும் போது அவை கண்களின் ஈரப்பதத்தை உறிஞ்சி கண்களுக்கு வறட்சி , எரிச்சலை உண்டாக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த பிரச்னை கண்ணாடி அணிபவர்களுக்கும் உள்ளது. இந்த சமயத்தில் கண்களை கசக்கினால் கண்கள் சிவந்து எரிச்சலை அதிகரிக்கும்.
கண்களில் எரிச்சல் அதிகமாகவோ, சிவந்து காணப்பட்டாலோ, வீக்கம் போன்ற பிரச்னைகள் இருந்தால் கண் மருத்துவரை அணுகுங்கள். கண்களில் எரிச்சல் இருப்பின் கசக்காதீர்கள். அதேபோல் கைகளை கண்களில் வைத்தால் கைகளின் பாக்டீரியா கண்களில் தொற்றிக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம். அதேபோல் சானிடைசர் பயன்படுத்தினாலும் கைகளை கண்களில் வைக்காதீர்கள்.