தனி சுத்தம் கருதி தினந்தோறும் குளிப்பது அவசியமாகும். நம்மை நாமே சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலமாக நோய்கள் பலவற்றை வராமல் தடுக்க முடியும். அதே சமயம், ஒவ்வொரு நாளும் ஸ்கிரைபர் வைத்து தேய்த்து குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மிக அதிப்படியான குளியலால் உங்கள் சருமத்தில் உள்ள நல்ல பாக்டீரியாவும் கூட அடித்துச் செல்லப்படும். இதன் விளைவாக சருமம் வறட்சியாகக் காணப்படும். இது மட்டுமல்லாமல் தோல் வெடிப்பு, அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை உண்டாகலாம்.
இன்றைய நவீன உலகில் யாரும் தினசரி குளிக்காமல் இருக்க மாட்டார்கள் என்பது உறுதி. அதுவும், வேலை, அலைந்து திரிந்து களைப்படைந்து வரும் சமயத்திலும், தினசரி காலை எழுந்தவுடன் சோம்பல் முறித்து சுறுசுறுப்பு அடையவும் குளியல் அவசியமாகிறது. எல்லோருமே கட்டாயம் குளிப்பார்கள் என வைத்துக் கொண்டாலும், நாம் அவசர கதியில் அதை முடித்து பறந்து ஓட வேண்டிய கட்டாயத்தில் இருப்போம். இதனால், உடலில் அவசியம் சுத்தம் செய்யப்பட வேண்டிய பகுதிகளை நாம் மறந்திருப்போம் அல்லது சரிவர செய்யாமல் இருப்போம். இந்தச் செய்தியில் அந்த அத்தியாவசிய சுத்தம் குறித்து அறிந்து கொள்ளலாம்.
கை அக்குள் : உங்கள் உடலில் அதிகப்படியாக வியர்வை சுரக்கும் என்றால், சருமத்தில் கெட்ட பாக்டீரியாக்கள் நிறைய படிந்து, துர்நாற்றம் வீசக் கூடும். குறிப்பாக, கை அக்குள் பகுதியில் வியர்வையினால் வரக் கூடிய தொந்தரவுகள் அதிகம். இங்கு பாக்டீரியா சேர்ந்தால் அரிப்பு மற்றும் தடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அக்குள் பகுதியில் உள்ள முடியை அவ்வபோது நீக்கம் செய்வதோடு, தினசரி இப்பகுதியை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
இடுப்பு பகுதி : ஒவ்வொரு நாளும் குளிக்கும் போது சுத்தம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பகுதி. அத்துடன் உள்ளாடைகளை தினசரி மாற்ற வேண்டும். மழைக்காலங்களில் உள்ளாடைகள் போதுமான அளவில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஈரப்பதம் உள்ள ஆடைகளை அணியக் கூடாது. பிறப்பு உறுப்புகளை சுற்றியிலும் சுருங்கிய தசைகள் மற்றும் ரோமம் இருப்பதால் அங்கு மில்லியன் கணக்கில் பாக்டீரியாக்கள் தங்கும். இதனால், நோய்த்தொற்று, அரிப்பு போன்றவை ஏற்படும். வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சோப் கொண்டு இப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.
பாதம் : உடலில் பலரும் சுத்தம் செய்ய மறந்து விடும் பகுதி இது. தட, தடவென தண்ணீரை மோந்து ஊற்றி அல்லது ஷவரில் நனைத்து, உடல் முழுவதும் வேக, வேகமாய் சோப்பு தேய்த்துக் குளிக்கும் பலரும் கால் பாதங்களை மறந்து விடுவார்கள். ஆனால், நாள் முழுவதும் சாக்ஸ் உள்ளே அடைத்து வைக்கப்படும் இப்பகுதியில் வியர்வை அதிகமாக சுரக்கும். தினசரி இப்பகுதியை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும்.