உடல் பருமனால் உடலில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, உடற்பயிற்சி இன்றி உடல் பருமன் அதிகரித்தால் ஹார்ட் அட்டாக், சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உடல் பருமன் என்பது 13 வகையான புற்றுநோய்களுடன் தொடர்புடையது என்ற தகவல் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது.
ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யலாம் : துரிதமான வாழ்க்கைச் சூழலில் சாப்பிடவும், தூங்கவும் கூட போதுமான நேரமின்றி ஓடிக் கொண்டிருக்கையில் எங்கிருந்து உடற்பயிற்சிகளை செய்வது என்ற கேள்வி உங்கள் மனதினுள் ஓடிக் கொண்டிருக்கிறதா? எப்படி இருந்தாலும் நாள் ஒன்றுக்கு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரையில் உடற்பயிற்சி செய்வது கட்டாயமாகும். உடற்பயிற்சிகளை மிதமான அளவில் தொடங்கி, பின்னர் கடுமையான அளவில் கொண்டு செல்லலாம். கடுமையான பயிற்சிகளை செய்யும்போது நமது இதயத்துடிப்பு 70 முதல் 85 சதவீதமாக இருக்கும்.
என்னென்ன பயிற்சிகளை முயற்சிக்கலாம் : வேகமான நடைபயிற்சி செய்வது நல்ல பலனை தரும். அதற்கான நேரம் ஒதுக்க முடியாதவர்கள் கடைக்கு செல்வது மற்றும் அருகாமைப் பகுதிகளுக்கு செல்லும்போது நடப்பதை வாடிக்கையாக வைத்துக் கொள்ளலாம் அல்லது சைக்கிள் பயன்படுத்துவது நல்லது. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளலாம்.
உடற்பயிற்சி வழிமுறைகள் : பயிற்சிகளை ஏனோ, தானோ என்று நம் இஷ்டத்திற்கு செய்யக் கூடாது. ஒவ்வொன்றுக்கும் ஒரு பொது விதிமுறை இருக்கிறது. அதனை கடைப்பிடிப்பது நல்லது. எந்தவொரு பயிற்சியை செய்வதற்கு முன்பாகவும் நம் உடலை அதற்கு ஏற்றாற்போல தயார் செய்து கொள்ள வேண்டும். அதாவது வார்ம் அப் பயிற்சிகள் மிக அவசியமானவை.
தினமும் உற்சாகமாக இருக்க வேண்டும் : உடற்பயிற்சி என்பதை கடமைக்கு செய்யாமல் அதை நம் வாழ்வியலின் ஒரு அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். தினசரி 10 ஆயிரம் அடிகள் நடந்து செல்லலாம். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமருவதை தவிர்த்து, அவ்வபோது நடக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பயிற்சிகளை செய்வதன் மூலமாக புற்றுநோய் தாக்கும் அபாயம் கட்டுப்படுத்தப்படுகிறது.