General symptoms For Liver disease : நம் உடலில் உள்ள மிகவும் முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இது தன்னைத் தானே உயிர்ப்பித்துக் கொள்ளும் திறன் கொண்ட ஆச்சரிய உறுப்பாகும். இந்த உறுப்பால், உடலில் உள்ள சுமார் 90 சதவீத நோய்களை தவிர்க்க முடியும். இதயம், மூளையை போல முக்கியத்துவம் வாய்ந்த பெரிய உறுப்பாக இருக்கும் கல்லீரல் நம் ரத்தத்தில் உள்ள பெரும்பாலான கெமிக்கல் லெவல்களை ஒழுங்குபடுத்துகிறது.
வயிறு மற்றும் குடலில் இருந்து வெளியேறும் அனைத்து ரத்தமும் கல்லீரல் வழியாக தான் செல்கிறது. உணவு செரிக்க தேவையான பித்தநீர், ரத்தம் உறைவதற்கு உதவும் கெமிக்கல் உள்ளிட்டவற்றை கல்லீரல் தான் நமக்கு வழங்குகிறது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வேலைகளை செய்யும் திறன் கொண்ட கல்லீரலை சேதப்படுத்துவது நாம் அன்றாடம் கடைபிடிக்கும் வாழ்க்கை முறைகள் தான். நமது உடலை நாம் சரிவர கவனிக்காத போது, கல்லீரல் மற்றும் பிற நோய்கள் ஏற்படுகிறது. அளவுக்கு அதிகமாக மது அருந்துவது, கட்டுப்பாடற்ற உடல் எடை அதிகரிப்பு, டைப் 2 நீரிழிவு நோய், அதிகப்படியான கொழுப்பு , மரபியல் அல்லது வைரஸ்கள், காரணமாக கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம்.
மலம் மிகவும் வெளிர் நிறமாக இருந்தால், மலத்திற்கு போதுமான பித்தம் வரவில்லை என்று அர்த்தம். பித்தப்பை, கணையம் அல்லது கல்லீரலில் பிரச்சனை இருந்தால் தான் மலத்தில் பித்த அளவு குறைவாக இருக்கும். எனவே கல்லீரல் ஆரோக்கியமாக இல்லை என்றால் வெளியேறும் மலம் டார்க்காக இல்லாமல் வெளிர் நிறத்தில் தொடர்ந்து வெளியேறும்.
தோல் அல்லது உங்கள் கண்களின் நிறம் மஞ்சளாக மாறினால் அது தீவிர கல்லீரல் நோய் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். ரத்த சிவப்பணுக்கள் சிதைவதால் உருவாகும் ஒரு சேர்மம் பிலிரூபின். இதனை கல்லீரலால் ப்ராசஸ் செய்ய முடியாது. இதனால் ரத்த ஓட்டத்தில் அதிக அளவு பிலிரூபின் கலக்க வழிவகுக்கிறது. இதனால் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும். இது முடிவில் மஞ்சள்காமாலை ஏற்பட காரணமாகிறது.
திரவம் குவிவதால் ஏற்படும் வயிற்று வீக்கம் பெரும்பாலும் கல்லீரல் நோயுடன் தொடர்புடையது. இந்த நிலை Ascites எனப்படுகிறது. கல்லீரலின் ரத்த நாளங்களில் அதிக அழுத்தம் மற்றும் அல்புமின் எனப்படும் புரதத்தின் குறைந்த அளவு ஆகியவற்றால் இந்த நிலை ஏற்படுகிறது. இது அடிவயிற்றில் திரவத்தைத் தக்கவைக்க வழிவகுக்கிறது. கால் மற்றும் கணுக்கால் வீக்கமும் கல்லீரல் நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.