வயது ஏற ஏற அதற்கு உண்டான மாற்றங்கள் நமது உடலில் இயற்கையாகவே தெரிய துவங்கும். வாழ்வில் நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதிலும் 30 வயதை நெருங்கும் வேலையில் அனைவருக்கும் பல்வேறு வித பொறுப்புக்கள் உண்டாகி இருக்கக்கூடும். திருமண வாழ்க்கை, குடும்பத்தை பார்த்துக் கொள்வது, பணம் ஈட்ட பாடுபடுவது, சுற்றி உள்ளவர்களிடம் நல்லதொரு உறவு முறையை வளர்த்துக் கொள்வது என பல்வேறு பொறுப்புக்கள் இருக்கும். இவை அனைத்தையும் விடவும் அதிகமாக நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் மிகவும் அவசியமாகிறது. எனவே உங்கள் உடலை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றி பார்ப்போம்.
உணவில் அக்கறை : 30 வயதிற்கு பிறகு நமது உடலில் இயற்கையாகவே கொழுப்பு சத்துக்கள் சேர துவங்கும். இதன் காரணமாகத்தான் பல்வேறு நபர்கள் 30 வயதை நெருங்கியதும் எடை கூட ஆரம்பிக்கின்றனர். ஆனால் இதற்காக நீங்கள் உங்களுடைய உணவு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் உட்கொள்ளும் உணவில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் நிரம்பி இருந்தாலே அவை உங்கள் உடலுக்கு போதுமானது. தினசரி உணவில் பழ வகைகளை சேர்த்துக் கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். இது தவிர எலும்புகளுக்கு நன்மை தரக்கூடிய வகையிலான உணவுகளை அன்றாடம் உட்கொள்ள வேண்டும்.
உடல் இயக்கத்தை அதிகரிக்க வேண்டும் : இந்த வயதில் அலுவலகம் செல்லும் பலரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை உடல் எடை கூடுவது மற்றும் முதுகு தண்டு பிரச்சனைகள். ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால் இவை உண்டாகின்றன. எனவே உடல் இயக்கத்தை அதிகரிக்கும் வகையிலான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். தினசரி உடற்பயிற்சி செய்வதும் வாக்கிங் செல்வது ஏதேனும் விளையாட்டுகளில் ஈடுபடுவது ஆகியவை உடல் இயக்கத்தை அதிகரித்து உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
போதுமான அளவு உறக்கம் : நாம் தினசரி போதுமான அளவு உறங்கினாலே பல்வேறு பிரச்சனைகள் ஏற்படாது. மேலும் ஒரு நாளைக்கு குறைந்தது 7 லிருந்து 8 மணி நேரம் வரை தூங்குபவர்களுக்கு உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் அதன் இயக்கங்களிலும் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது. இரவு நன்றாக உறங்குவது மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் நம்முடைய மனநிலையையும் நன்றாக வைக்கிறது. சரியான அளவில் உறங்கவில்லை எனில் இதய நோய் போன்ற பல்வேறு வித நோய்கள் உண்டாவதற்கு அதுவே காரணமாகிவிடும்.
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதலை கைவிடுங்கள் : இன்றைய நிலையில் பொதுவாகவே பலரும் புகைப்பிடிப்பதும் மது குடிப்பதும் மிகவும் சாதாரணமாகிவிட்டது. அவை அந்தப் நேரத்தில் மிகவும் மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இருந்தாலும் எதிர்காலத்தில் உண்டாகக்கூடிய பல்வேறு உடல் உபாதைகளுக்கு அவை தான் காரணமாக இருக்கும். முக்கியமாக நீங்கள் முப்பது வயதை நெருங்கும் நபராக இருக்கும் பட்சத்தில் புகைபிடிப்பது மது அருந்துதல் போன்றவற்றை தவிர்த்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
ஓய்வு எடுத்துக் கொள்வது : இது ஒரு முக்கியமான செயல்பாடு ஆகும். இந்த வயதில் ஓடியாடி உழைத்து மிகவும் களைப்படைய கூடிய ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் முடிந்தவரை உங்களுக்கென்று நேரம் ஒதுக்கி உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கும் உங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கும் சில விஷயங்களை செய்தாக வேண்டும். உதாரணத்திற்கு யோகாசனம், செய்வது தியானம் செய்வது, எங்கேனும் பயணங்களை மேற்கொள்வது ஆகியவையும் நம் மனதிற்கு புத்துணர்ச்சி தரும். அதுபோலவே ஓவியம் வரைவதும், பிடித்த பாடல்களை கேட்பது, பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடுவதும் கூட உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.