காய்ச்சலை கையாள்வது ஒரு மிகப்பெரிய சாவாலாகும், ஏனெனில் அது உங்கள் உடலின் ஆற்றலை முழுவதுமாக வெளியேற்றி, உங்களை பலவீனமாக்கக் கூடும். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரியான உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவது அவசியம். அதே நேரத்தில், உங்கள் வயிற்றில் மிதமான மற்றும் எளிதான உணவாகவும் இருக்க வேண்டும். அதாவது அவை எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளாக இருக்க வேண்டும். காரணம் காய்ச்சலின் போது ஜீரண சக்தியின் வேகம் குறைவாக இருக்கும்.
நீங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சரியான உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம். இந்த நேரத்தில் எண்ணெயில் பொறித்த உணவுகள், சர்க்கரை மற்றும் கிரீம் உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும். அதற்குப் பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களைக் கடைப்பிடிக்கவும். அவை உங்களை நன்றாக உணர வைப்பது மட்டுமல்லாமல், காய்ச்சலை எதிர்த்துப் போராட உங்கள் உடலை உற்சாகப்படுத்தும்
சிக்கன் சூப் செய்ய தேவையான பொருட்கள் : நறுக்கிய கோழி துண்டுகள் - 500 கிராம், சோம்பு - 1/4 ஸ்பூன், மிளகு தூள் - 1/2 ஸ்பூன், இஞ்சி - 1 ஸ்பூன், பூண்டு - 1 ஸ்பூன், பச்சை மிளகாய் - 1, சோளமாவு - 1/2 கப், உப்பு - 1/2 ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு, எண்ணெய் - 1 ஸ்பூன், தண்ணீர் - 1 லிட்டர்
சிக்கன் சூப் செய்முறை : சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.பின் பச்சை மிளகாய், இஞ்சி , பூண்டு , மிளகு, சோம்பு சேர்த்து வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய சிக்கன் சேர்த்து வேகும் வரை வதக்கவும். வதங்கியதும் தண்ணீர் சேர்த்து அதோடு உப்பு , ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து மூடி கொதிக்கவிடுங்கள். கால் அளவு தண்ணீர் குறைந்ததும் சோள மாவை 1 ஸ்பூன் தண்ணீரில் கரைத்து அதை ஊற்றி மீண்டும் கிளறியவாறு கொதிக்க விடுங்கள். சூப் கெட்டிப் பதம் வந்ததும் கொத்தமல்லி, மிளகுத்தூள் தூவினால் சிக்கன் சூப் தயார்.
வேக வைத்த முட்டை : முட்டை புரோட்டின் சத்து நிறைந்தது. காய்ச்சலின் போது புரோட்டீன் அவசியம் என்பதால் முட்டையும் அவசியம்தான். அதோடு முட்டையில் விட்டமின் பி6 மற்றும் பி12 இருப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் துத்தநாகம் மற்றும் செலினியம் ஆகியவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. காய்ச்சலின் போது நல்ல உணவாகவும் இருக்கும்.
செய்முறை : 3 முட்டைகளை சம பாகங்களாக வெட்டவும். அதன் மீது ஒரு சிட்டிகை கருப்பு மிளகு மற்றும் உப்பு தூவவும். மீண்டும் இரு துண்டுகளாக உள்ள முட்டையை ஒன்றாக சேர்த்து மூடி ஒரு கிண்ணத்தில் வைக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேப்சிகம் ஆகியவற்றை முட்டையின் மேல் சேர்த்து அலங்கரித்தால் சூடான முட்டை ரெடி.
கிச்சடி செய்யத் தேவையான பொருட்கள் : அரிசி - 1 கப், துவரை பருப்பு - 1 கப்,உப்பு - தேவையான அளவு,மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்,எண்ணெய் – 2 ஸ்பூன், நெய் - 2 ஸ்பூன்,சீரகம் - 1 ஸ்பூன்,பிரியாணி இலை - 2,பட்டை - 1 சிறிய துண்டு,இஞ்சி - 1 துண்டு,பூண்டு - 10 பற்கள்,பச்சை மிளகாய் - 3,வெங்காயம் - 2,தக்காளி - 2, கொத்தமல்லி இலை -சிறிதளவு,தனியா தூள் - 1/2 ஸ்பூன்,பெருங்காயத் தூள் - ¼ ஸ்பூன்,கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்,நெய் - 1 ஸ்பூன்,உப்பு - 1/2 ஸ்பூன்,மிளகாய் தூள் - 1 ஸ்பூன்,சீரக தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை : தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும். அரிசி மற்றும் துவரம் பருப்பை நன்றாக கழுவி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பை குக்கரில் போட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மூடி 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் சீரகம், பிரியாணி இலை, பட்டை சேர்த்து வறுக்கவும். அடுத்து நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும் உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.அடுத்து வேகவைத்த அரிசி பருப்பை சேர்த்து கலக்கவும். இறுதியாக நெய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து இறக்கினால் கிச்சடி தயார்.