

பொதுவாகவே ஆண்கள் தங்கள் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் பலர் இளம் வயதிலேயே அதிக உடல்பருமனை பெறுகின்றனர். இதற்காக பல ஆண்கள் இணையத்தில் உடல் எடை இழப்பு உதவிக்குறிப்புகளை தேடுவர். ஆனால் அவை பெரும்பாலும் பெண்களை இலக்காகக் கொண்டதாகவே இருக்கும். கவலைப்படாதீர்கள் எளிதில் உடல்பருமனை குறைக்க சில உதவிக்குறிப்புகளை பற்றி காண்போம்.


வேலை நேரத்திற்கு இடையில் இந்த எளிய உடற்பயிற்சியை செய்யுங்கள் : பொதுவாக ஆண்கள் ஒவ்வொரு புத்தாண்டின் போதும் ஒரு தீர்மானம் எடுப்பர். அது என்னவென்றால் உடல் எடையை குறைக்க ஜிம்முக்கு போவது. ஆனால் அதிக வேலைப்பளு போன்ற காரணங்களால் அவர்களால் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாது. அப்படியானால் நீங்கள் உங்கள் வேலை நேரத்தில் ஒரு எளிய உடற்பயிற்சியை செய்ய நேரம் ஒதுக்கலாமே. உங்கள் பணியிடத்திலோ அல்லது வீட்டிலோ லிப்டுக்கு பதிலாக படிக்கட்டுகளில் ஏறுவதன் மூலம் உங்கள் பயிற்சியை தொடங்கலாம். இதனை நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை என மொத்தம் 15 நிமிடங்கள் செய்யலாம். காலையில், மதிய உணவுக்குப் பிறகு, இரவு உணவிற்குப் பிறகு மற்றும் உங்கள் வேலை நேரத்திற்கு இடையில் ஒரு முறை என படிக்கட்டுகளில் ஏறலாம்.


உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள் : விடுமுறை நாட்களில் ஸ்மார்ஃபோனை உபயோகிப்பது, படம் பார்ப்பது, அரட்டை அடிப்பது என ஆண்கள் நேரத்தை செலவிடுகின்றனர். அந்த நேரங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். உங்கள் நண்பர்களுடன் ஓட அல்லது சைக்கிள் ஓட்டுவதற்கு நீங்கள் நேரத்தை செலவிடலாம். இதனால் உடற்பயிற்சி மேற்கொண்டபடி உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடலாம். அதேபோல வார இறுதி நாட்களில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சில விளையாட்டுகளை விளையாடலாம். இது உடல் மற்றும் ஆன்மா ஆகிய இரண்டிற்கும் களிப்பூட்டும் செயலாக இருக்கும்.


போதுமான அளவு உறக்கம் : 20 மற்றும் 30 வயதிற்கு பிறகு ஆண்கள் குடும்பப் பொறுப்புகளை சுமப்பதால் சரியான தூக்கத்தை மேற்கொள்வதில்லை. சரியாக தூங்காமல் இருப்பது ஒற்றைத் தலைவலி, பித்தம், முதுகுவலி மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதேபோல நன்றாக தூங்காதவர்கள் வழக்கமாக அதிகப்படியான உணவை உட்கொள்கிறார்கள் என ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது கூடுதல் எடை அதிகரிக்க ஒரு முக்கிய காரணம் ஆகும். எனவே ஒவ்வொரு நாளும் 6 முதல் 8 மணி நேரம் தூங்குவதை இலக்காக வைத்துக்கொள்ளுங்கள்.


முறையான டயட்டை கடைபிடியுங்கள்: ஆல்கஹால் மற்றும் ஜங் புட் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். எண்ணெய் பதார்த்தங்களை தவிர்த்து நட்ஸ் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுகளுக்கு மாறவும். உங்கள் உணவை சிறிய பகுதிகளாக பிரிக்கவும். எனவே, 3 வேளை அதிக உணவை உட்கொள்வதற்கு பதிலாக, 5 வேளை கொஞ்சம் கொஞ்சமாக உணவை உட்கொள்ளுங்கள். எந்தவொரு எடை இழப்பு திட்டத்திலும் புரதம் ஒரு முக்கிய பகுதியாகும். ஏனெனில் இது பசியை அடக்குகிறது. அது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் மெலிந்த தசை திசுக்களை உருவாக்க மற்றும் பராமரிக்க உதவுகிறது. சில நல்ல புரத மூலங்களில் கோழி, முட்டை, வான்கோழி, மாட்டிறைச்சி, மீன் வகைகள் புரதங்கள் நிறைந்துள்ளது.