காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது பல விதங்களில் உடலுக்கு நன்மை அளிக்கிறது என்று பலரும் தேன் நீரை குடித்து வருகின்றனர். உடல் எடை குறைப்புக்கு உதவும், செரிமானத்தை மேம்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்கும், உடல் வெப்பச் சமநிலையை நிர்வகிக்க உதவும் என்று பலவிதமான நன்மைகளை அளிக்கும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக தேனை சூடாக்கக் கூடாது என்று கூறப்படுவது உண்டு. தேனில் உள்ள சத்துக்களும், மருத்துவப் பண்புகளும் அதனை சூடு படுத்தும்போது குறையும் அல்லது மருத்துவ குணங்களை தேன் இழந்துவிடும். அதனால், வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் தேனின் நன்மைகள் கெடாது என்று பலரும் இந்த பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அதே போல, சூடான பாலிலும் தேன் கலந்து குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. எந்த சூடான திரவத்திலும் தேனைக் கலந்து குடிக்கக்கூடாது.
தேன் ஆன்டிஆக்சிடன்ட்டுகள் நிறைந்தது. இது ரசாயனம் இல்லாத, சர்க்கரைக்கு மாற்றான இனிப்பாகப் பயன்படுத்தலாம். மேலும், இதில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துகளும் அடங்கியுள்ளது. இருப்பினும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, ஆயுர்வேத மருத்துவத்தின் நடைமுறைகள் தேனை சூடாக்கக் கூடாது என்றும் தேநீர், பால் அல்லது தண்ணீர் போன்ற சூடான திரவங்களுடன் சேர்த்து உட்கொள்ளக் கூடாது என்றும் பரிந்துரைக்கின்றன.
ஆயுர்வேதத்தில் ஒவ்வொரு உணவையும் எப்படி உண்ண வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. அது அந்த உணவின் தன்மையை பாதிக்காமல், அதில் உள்ள சத்துக்களை நாம் முழுமையாகப் பெறுவதற்கு உதவும். அவற்றில் முக்கியமானது தேன். தேனுக்கு காலாவதி தேதி கிடையாது. ஆயுர்வேத மருத்துவத்தில், தேனும் முக்கியமான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆயுர்வேத நிபுணர் ராதாமணி அவர்கள் தனது இன்ஸ்டாகிராமில், " சூடேற்றப்பட்ட தேன், ஆயுர்வேத நச்சு நீக்கும் சிகிச்சைகளான பஸ்தி மற்றும் வாமனம் ஆகிய வெளிப்புற சிகிச்சைகளின் போது பயன்படுத்தப்படுகிறது." இந்த சூடேற்றப்பட்ட தேன் உட்கொள்வதற்காக வழங்கப்படுவதில்லை. எனவே, அது செரிமான அமைப்பில் நுழையாது என்று அவர் விளக்கினார். தேனை சூடாக உட்கொள்ளும் போது அது உடலில் 'அமா' எனப்படும் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது. நீண்ட காலத்திற்கு இதை உட்கொண்டால், உடலில் நச்சு அதிகமாகி, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என்றும் விளக்கியுள்ளார்.