மூக்கு மற்றும் வாயை மூடாமை : சிலர் தாடைக்குக் கீழ் மாஸ்கை இறக்கிவிட்டுக்கொண்டு சுற்றுவார்கள். இதற்கு நீங்கள் மாஸ்க் அணியவே தேவையில்லை. ஏனெனில் வைரஸானது வாய் மற்றும் மூக்கு வழியாகத்தான் பரவுகிறது. அவற்றை மூடவே மாஸ்க். ஆனால் அதை திறந்துவிட்டு தாடையில் இறக்கிவிடுவதில் பயனில்லை.எனவே அடுத்தமுறை மூக்கு மற்றும் வாய் நன்றாக மூடி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
திருப்பி அணிவது : சிலர் பின் புறமாக திருப்பி அணிந்திருப்பார்கள். இவ்வாறு அணிவதாலும் மாஸ்க் பாதுகாப்பை இழக்கிறது. சர்ஜிகல் மாஸ்குகளில் இந்தக் குழப்பம் இருக்காது. வீட்டில் துணியில் தயாரிக்கப்பட்ட மாஸ்குகள் அணியும்போது இந்த குழப்பம் வரும். அதேபோல் வெளியே சென்றுவிட்டு வந்து மீண்டும் பயன்படுத்தும்போது உள்பக்கம் வெளிப்பக்கம் பார்த்து அணியுங்கள்.
தொடுவதை தவிருங்கள் : மாஸ்கின் வெளிப்புறத்தை தொடுவதை தவிறுங்கள். அதை சரி செய்கிறேன், கழற்றி மாட்டுகிறேன் என அதை அடிக்கடி தொடுவதாலும் வைரஸ் ஆபத்து உள்ளது. அவ்வாறு அதை சரியாக அணிய வேண்டுமெனில் அணிந்துவிட்டு உடனே சானிடைசர் கொண்டு கைகளை துடைத்துக்கொள்ளுங்கள். வீட்டிற்கு வந்ததும் சோப்பு போட்டு கட்டாயம் கழுவுங்கள்.
மீண்டும் பயன்படுத்துதல் : வீட்டில் மாஸ்குகளையும் உடுத்தும் ஆடைக்களைப் போல் நிறைய வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை வெளியே சென்று வந்ததும் அதை சோப்பால் அலசி காய வைத்துவிடுங்கள். அடுத்த முறை வேறொரு மாஸ்கை பயன்படுத்துங்கள். ஒரே மாஸ்கை பயன்படுத்துவதும் பரவலுக்கு சாத்தியக் கூறுகளை உண்டாக்கும்.