குழந்தைபேறுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வோருக்கு பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். ஏன் இயல்பாக கருத்தரிக்கவில்லை? உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கிறதா? போன்ற சந்தேகத்துடன் மருத்துவமனைக்கு செல்வார்கள். மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு மன அழுத்தம் மற்றும் பதட்டத்தில் இருந்து விடுபடுவார்கள். சிகிச்சையின்போது எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளால் உடல் எடை கூடுமா? பக்கவிளைவுகள் ஏதேனும் ஏற்படுமா? என்ற சந்தேகமும் பரவலாக இருக்கிறது. மருத்துவர் காஞ்சனா தேவி கொடுத்துள்ள விளக்கத்தைக் பார்க்கலாம்.
குழந்தைபேறு சிகிச்சை உடல் எடையை அதிகரிக்குமா : பொதுவாக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் என பலரும் கூறுவதை நாம் கேட்டிருப்போம். அதேபோல், குழந்தைபேறுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களில் ஒரு சிலருக்கு உடல் எடை கூடும். பாலிசிஸ்டிக் கருப்பையுடன் குழந்தைபேறு சிகிச்சைக்கு செல்லும் பெண்களில் 50 விழுக்காட்டினர் ஏற்கனவே கூடுதல் எடையுடன் உள்ளனர் அல்லது தொப்பையுடன் காணப்படுகின்றனர். எஞ்சியவர்களுக்கு சிகிச்சையின்போது அல்லது கருவுற்றபிறகு உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
உடல் எடை அதிகரிக்க காரணம் : ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான உடல் அமைப்பை கொண்டிருப்பதால், குழந்தைபேறு சிகிச்சையில் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கணிப்பது கடினமானது. அண்டவிடுப்பின் தூண்டல் அல்லது ஐ.யு.ஐ சிகிச்சை மருந்துகள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை அதிகரிக்கின்றன. இதனால் ஒரு சிலருக்கு எடை கூடுகிறது, ஒரு சிலர் இயல்பான எடையுடன் இருக்கின்றனர்.
கருவுறுதல் சிகிச்சையில் இருப்பவர்கள் மருந்துகளை எடுத்துக்கொள்வதுடன், உடல் உழைப்பையும் குறைத்துக் கொள்வார்கள். குழந்தை தங்கவேண்டும் என்பதற்காக ஓய்வில் இருப்பார்கள். அப்போது, எடுத்துக்கொள்ளும் மருந்துகளுடன் கூடிய உணவுமுறை உடல் எடையை அதிகரிக்கின்றன. ஓய்வில் இருந்துகொண்டு குழந்தைபேறுக்காக சிகிச்சை எடுப்பது, பலருக்கும் பயனைக் கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. அவை ஹார்மோன் மாற்றங்களுக்கும் வித்திடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கட்டுக்கதைகளும்.. விளக்கமும்.. : ஐ.வி.எப் சிகிச்சையினால் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். ஆனால் அனைத்து பெண்களுக்கும் அதிகரிக்கும் என்று உறுதியாக கூறமுடியாது. வயிற்று உப்பசமாக இருப்பது உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. அது உண்மையென்றாலும் குறிப்பிட்ட காலத்தில் சரியாகிவிடும். உடல் உழைப்பு குறையும்போது அல்லது செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால் ஒரு சில பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். அதிகமான எடை உள்ளது என்பதற்காக குறைவாக சாப்பிடக்கூடாது. மாறாக, ஆரோக்கியமான உணவுகளை சரியான அளவில் சாப்பிடலாம்.
டிப்ஸ் : பல்வேறு ஆய்வுகளில் கருவுறுதல் சிகிச்சை என்பது உடல் எடையை அதிகரிக்காது என ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். இது தொடர்பாக உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் விளக்கம் கேட்டுக்கொள்ளலாம். இந்த சிகிச்சையில் இருப்பவர்கள் உடல் எடை கூடுவதை தவிர்க்கும் பொருட்டு உணவில் கூடுதல் கவனம் செலுத்தலாம். உடற்பயிற்சிகளை நிறுத்தாமல் தொடர்ந்து மேற்கொள்ளலாம். கருவுற்றபோது அல்லது அதற்கு பிறகான உடல் எடை அதிகரிப்பு இரண்டாவது குழந்தை உருவாவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் திடமாக இருக்க வேண்டும்.