முன்பை விட இப்போது கருதரிப்பு குறைபாடு அதிகமாக இருப்பதால், குழந்தை பெற்றுக்கொள்ள ஏராளமானோர் மருத்துவமனைக்கு சென்று வருவதை பார்க்கலாம். இதனால், திருமண வயது பெண்கள் மற்றும் ஆண்கள் கருத்தரிப்பு மற்றும் குழந்தையை பெற்றெடுத்தல் குறித்து போதிய தகவல்களை தெரிந்து கொள்வது அவசியம்.இந்த தகவல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும்போது, தங்களுக்கான பிரச்சனைகளை உடனடியாக கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும்.
ஏன் வயது காரணம்? : ஆண் மற்றும் பெண்களைப் பொறுத்தவரை வயது முக்கிய பங்கு வகிக்கிறது. வயதுக்கு ஏற்றார்போல் உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியமான கருப்பை மற்றும் கருமுட்டைகள் ஒரு பெண்ணுக்கு உருவானால், வயதான காலத்தில் கூட குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும். ஆண்களுக்கும் விந்துவின் தன்மை நன்றாக இருக்கும்பட்சத்தில் குழந்தை பெற்றெடுப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால், வயதாகும்போது ஆண் மற்றும் பெண் பலருக்கும் விந்து மற்றும் கரு முட்டைகள் தரமானதாகவும் அல்லது இணையக்கூடிய ஆற்றல் கொண்டவையாக இருக்காது.
கருவுறுதலுக்கு சரியான காலம் : 20 வயதுடைய பெண்களின் கருப்பையில் கரு முட்டைகள் ஆரோக்கியமாக இருக்கும். இந்த வயதில் பெண்கள் கருவுறுதலுக்கு சரியான நேரமாக இருப்பதால், 20 வயதுடைய பெண்கள் எளிதாக கர்ப்பம் தரிக்க முடியும். மேலும், இந்த வயதில் கர்ப்பம் தரிக்கும் பெண்களின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன. கருமுட்டைகளில் ஜீன்கள் சார்ந்த எந்தவிதமான பிரச்சனைகளும் இருக்காது. இதனால் பிறவிக் குறைபாடுகள் தவிர்க்கப்படும். குறைவான எடை அல்லது குறைமாத குழந்தை பிறப்புகள் இருக்காது.
தாய்மை அடையும் பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் பொதுவாக வரக்கூடிய உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பக்க பிரச்சனைகள் இருக்காது. அதேநேரத்தில் சிறிய அளவிலான சிக்கல்களும் இருக்கின்றன. முதல் பிரசவம் என்பதால் பிரசவகால உபாதைகள் கடுமையானதாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக, பி.சி.ஓ.டி அல்லது சிறுநீரக தொந்தரவு இருப்பவர் என்றால் பிரசவம் ஆபத்தில் முடியவும் வாய்ப்புகள் உள்ளது.
30 வயதில் கருவுறுதல் : இந்த வயதில் இருக்கும் பெண்கள் கருவுறுதல் என்பது 15 முதல் 20 விழுக்காடு வாய்ப்புகள் மட்டுமே இருக்கும். ஏதேனும் உடல் நலக் குறைபாடுகள் இருந்தால், இந்த விழுக்காடு மேலும் குறையும். 35 வயதுகளை கடக்கும்போது இயல்பாக கருத்தரிக்கும் ஆற்றலை பெண்கள் இழந்து விடுகின்றனர். இதற்கு காரணம் தரமான கருமுட்டைகள் அவர்கள் உடலில் உருவாகாது. 30வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் கருவுற்று குழந்தைகளை பெறும்போது, சிசுவுக்கு ஜீன் சார்ந்த பிரச்சனைகள் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. எக்டோபிக் பாதிப்புகள் அதிகம்.
40 வயதுக்கு பிறகு : 40 வயதைக் கடந்த பெண்கள் முழுவதுமாக கருவுறும் தன்மையை இழந்து விடுகின்றனர். மருத்துவர்களின் கூற்றுப்படி, 5 விழுக்காடுக்கும் குறைவாக மட்டுமே வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். 45 வயதைக் கடக்கும்போது கருவுறும் வாய்ப்பு என்பது ஒரு விழுக்காடு மட்டுமே இருக்கும். ஏறத்தாழ சரிபாதியான பெண்களுக்கு 40 வயதுக்கும் மேல் கருவுறும் தன்மையை இழந்துவிடுவதாக சி.டி.சி கூறுகிறது. இருப்பினும் நம்பிக்கையை இழக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.