தலைவலி மற்றும் ஒற்றை தலைவலியை குணமாக்க யோகா உதவுகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன. யோகா இந்த பிரச்சினைகளால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்களுக்கு மிகவும் தேவையான நிவாரணம் அளிக்கிறது. உங்கள் வழக்கமான யோகா பயிற்சியுடன் இதனையும் நீங்கள் சேர்க்கும்போது, வலியை சமாளிக்கவும், உடலியல் அழுத்தத்தின் அளவைக் குறைக்கவும் முடியும். கவலை மற்றும் மன அழுத்தம் இரண்டும் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கிய பங்களிப்பாகும்.
நாம் அதிக வேலை செய்யும்போது நம் நரம்பு மண்டலமும், மனமும் அதைக் கையாள முடியாமல் போய்விடும். மேலும் இது ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலியின் தாக்குதல்களுக்கு வழிவகுக்கிறது. உடலில் உள்ள பதற்றத்தைப் போக்குவதற்கும், தலைவலியைப் போக்குவதற்கும் யோகா ஒரு சிறந்த பயிற்சியாகும்.இந்த 5 யோகா உங்களுடைய தலைவலியை குறைக்க உதவும்.
1. பாலாசனா: பாலாசனம் என அழைக்கப்படும் இது, சிசு நிலை என்றும் அழைக்கப்படுகிறது. கீழே மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு முழங்காலுக்கு கீழ் மற்றும் கணுக்காலுக்கு மேலுள்ள காலின் முன் பகுதி தரையில் இருக்குமாறு வைத்து கொள்ள வேண்டும். தரையில் நெற்றி தொடும் அளவிற்கு குனியவும். கால் கட்டை விரல்கள் இரண்டும் தொட்டு கொண்டு இருக்கும்படி வைத்து குதி கால்களின் மீது உட்கார வேண்டும். இரு கைகளும் பக்கவாட்டிலேயே இருக்கட்டும். மூச்சை வெளியே விட்டபடி தொடைகளுக்கிடையே உடலை கொண்டு வர வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுந்து சுவாசியுங்கள். 8 முதல் 10 முறை இப்படியே இருங்கள்.
2. பாதஹஸ்தாசனம்: பாதஹஸ்தாசனம், அதாவது பாதம் என்றால் கால், ஹஸ்தம் என்றால் கை இந்த இரண்டையும் இணைக்கும் படி செய்யும் ஆசனம். தலைவலிக்கான இந்த யோகாசனத்தில், உங்கள் கால்களை இடுப்பு அகலத்தில் வைத்து நேராகவும் உயரமாகவும் நிற்கவும்.நீங்கள் நெகிழ்வாக இல்லாவிட்டால் முழங்கால்களில் வளைந்து, உங்கள் இடுப்பில் இருந்து, உங்கள் தலையின் மேற்பகுதியை நேராக தரையை நோக்கி நீட்ட முயற்சிக்கவும்.
குனிய வசதியாக இருக்க உங்கள் முழங்கால்களை மென்மையாகவும், சற்று வளைத்து வைக்கவும். உங்கள் குதிகால் யோகா மேட் அல்லது பாயில் நன்றாக அழுத்தி தட்டையாக வைக்கவும். பின்னர் மெதுவாக தலையை காலுடன் ஒட்டியவாறு வைத்துக் கொள்ளவும். நீங்கள் விரும்பினால், உங்கள் கைகளை பாய் மீது வைத்தோ அல்லது உங்கள் முழங்கைகளைப் பிடித்துக்கொண்டோ கூட செய்யலாம். 6 முதல் 8 முறை மூச்சை நன்றாக இழுத்து வெளியே விடும் வரை இதே நிலையில் இருக்க வேண்டும்.
3. பவன்முக்தாசனா (சுபைன் ட்விஸ்ட்): முதுகு முழுவதும் தரையில் படும் படி நன்றாக படுத்துக்கொள்ள வேண்டும். முதலில் வலது பக்க முழங்காலை மடித்து, உங்கள் மார்புக்குக் கொண்டு வாருங்கள். மார்பு வரை முழங்கால் செல்லவில்லை என்றால் இரு உள்ளங்கைகளையும் முட்டியின் மேல் வைத்து அழுத்தி உட்புறமாக தள்ளுங்கள்.பின்னர் முழங்கால் பகுதிக்கு உங்களுடைய முகத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அந்த நிலையிலேயே 6 முதல் 8 முறை சுவாசத்தை நன்றாக வெளியே இழுந்து விட வேண்டும்.
4. விபரீதகரணி ஆசனம்:நன்றாக நீட்டிப் படுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து மெதுவாக மேலே உயர்த்தவும். இரண்டு கால்களும் நேராக மேலே பார்த்த படி இருக்க வேண்டும். உடல் கனம் முழுவதும் தோள்பட்டை கழுத்தில் இருக்கும் படி வைக்கவும். இருகைகளையும் இடுப்புக்கு பின்புறம் வைத்துக் கொள்ளவும். சாதாரண மூச்சில் 5 நிமிடங்கள் இருக்கவும். பின்பு மெதுவாக கால்களை கீழே கொண்டு வந்து தரையில் வைக்கவும்.
5. ஆனந்தாசனம்:முதுகு தரையில் படும் படி நன்றாக நீட்டி படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கைகளை உங்கள் உடலின் பக்கவாட்டில் நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளங்கைகள் மேலே பார்த்த படி இருக்க வேண்டும். கைகள் மற்றும் தோள்கள் தளர்வாகவும், தரையை நோக்கி ரிலாக்ஸாக இருக்கும் படி வைத்துக் கொள்ளுங்கள். மூச்சை நன்றாக இழுத்து சுவாசித்து 10 முறை இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.இப்போது ஒவ்வொரு முறையும் நீங்கள் தலைவலியை உணரும்போது, ஒரு மாத்திரையை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக இந்த ஆசனங்களை முயற்சிக்கவும். பலன்களை முழுமையாக அனுபவிக்க, அவற்றை உங்கள் வழக்கமான யோகாசனத்தில் சேர்த்துக்கொள்ளுவது நல்லது.