பொதுவான உடல்நலப் பிரச்சனைகளாக கருதப்படும் காய்ச்சல், ஜலதோஷம் போன்றவற்றை தவிர, மக்களை அச்சுறுத்தக் கூடிய பெருந்தொற்று நோய்கள் அவ்வப்போது கண்டறியப்பட்டு வருகின்றன. ஒன்று மாற்றி, ஒன்றாக வந்து கொண்டிருப்பதால் சில நோய்களுக்கான அறிகுறிகள் குறித்து நமக்கு குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, தற்சமயம் மக்களை பாதிக்கக் கூடிய ஜிகா வைரஸ், டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்களை நாம் வேறுபடுத்தி பார்க்க வேண்டியிருக்கிறது.
அறிகுறிகளில் வேறுபாடு : மூன்று நோய்களுக்குமான அறிகுறிகள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருப்பதால், அவற்றுக்கு இடையே வேறுபாடுகளை கண்டறிவது கடினமாகும். டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு போன்றவை ஏற்படும். ஆனால், சிக்கன்குனியாவில் இந்த அறிகுறிகள் இருக்காது. அதேபோன்று ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நரம்பியல் பிரச்சினைகள் ஏற்படும். இந்த பாதிப்பு மற்ற நோய்களில் இருக்காது. அதிகமான காய்ச்சல், தலைவலி, கண்களில் வலி போன்ற அறிகுறிகள் பொதுவானதாகும்.
குணமடையும் காலம் வேறுபடும் : டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவ கண்காணிப்பு மிக, மிக அவசியமாகும். சிலரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருக்கலாம். அதே சமயம், ஜிகா வைரஸ், சிக்கன்குனியா போன்ற நோய்களின் அறிகுறிகளானது ஓரிரு நாட்கள் அல்லது வாரங்களில் மறைந்து விடும் என்பதால், இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவை இருக்காது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தீவிரத்தன்மை கொண்ட விளைவுகள் : ஜிகா வைரஸ், டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காட்டிலும் சிக்கன்குனியாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு வீக்கம் மற்றும் வலி அதிகமாக இருக்கிறது. ஜிகா வைரஸ் நோயாளிகள் சிலருக்கு எந்தவித அறிகுறியும் ஏற்படாது. சிலருக்கு தசை வலி, மூட்டு வலி, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.
பாதிக்கப்படும் உடல் உறுப்புகள் : டெங்கு பாதிப்புகள் பெரும்பாலும் கை, கால்கள், முகத்தில் தென்படுகின்றன. சிக்கன்குனியா பாதித்தவர்களுக்கு முகம், கை, கால்கள், பாதங்களில் அரிப்பு ஏற்படுகின்றன. ஜிகா வைரஸ் காரணமாக அரிப்பு ஏற்படும் இடங்களில் தோல் சிவந்து போகும். ஆனால், ஜிகா வைரஸ் அறிகுறிகள் மிதமான அளவில் இருக்கும்.
பாதிக்கப்பட வாய்ப்புள்ள பிரிவினர் : இந்த மூன்று நோய்களுமே அனைத்து வயதுப் பிரிவினரையும் தாக்கும். எனினும், குழந்தைகள் மற்றும் கரிப்பிணி பெண்களை ஜிகா வைரஸ் கடுமையாக பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். டெங்குவால் முதல்முறை பாதிக்கப்படுபவர்கள் மற்றும் வயதில் பெரியவர்கள், ஏற்கனவே இணை நோய் கொண்டவர்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும். சிக்கன்குனியாவை பொருத்தவரையில் உயர் ரத்தம், சர்க்கரை நோய் அல்லது இதயநோய் கொண்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.