முருங்கை மரம் பார்க்கும் நம் கண்களுக்கு விருந்தளிப்பது மட்டுமல்ல, உண்மையில் ஒரு அதிசய மரம் ஆகும். முருங்கை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் நாம் சாப்பிட கூடியதாக இருப்பதால் இது ஒரு சூப்பர் ஃபுட்களை தரும் அற்புத மரமாக குறிப்பிடப்படுகிறது. முருங்கை மரத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் அது தரும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் காரணமாக, பல நூற்றாண்டுகளாக மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஒன்றாக இருந்து வருகிறது.
முருங்கை மரத்தின் முழுப் பகுதியும் வெவ்வேறு வழிகளில் பயனுள்ளதாக இருக்கிறது. முருங்கை பூக்கள், முருங்கைக்காய், முருங்கை இலை என முருங்கை மரத்தின் பகுதிகள் நமக்கு பல்வேறு நன்மைகளை அள்ளி தருகின்றன. இந்த வசந்த காலத்தில் இவற்றை பல வடிவங்களில் உணவில் சேர்த்து உட்கொண்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
இந்த வசந்த காலத்தில் நீங்கள் முருங்கையை டீ, பொரியல், கறி, ஊறுகாய், சப்ஜி மற்றும் சப்பாத்தி போன்ற பல வடிவங்களில் சாப்பிடலாம். தென்னிந்தியாவில் மட்டுமல்ல நாட்டின் கிழக்குப் பகுதியிலும் கூட முருங்கை ஒரு பிரபலமான சமையல் பொருளாக இருந்து வருகிறது. முருங்கை மரத்தின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி பார்க்கும் போது, இதில் ஜிங்க், கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 (தியாமின்), மெக்னீசியம், பி2 (ரைபோஃப்ளேவின்), பி3 (நியாசின்), பி-6, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் (வைட்டமின் சி), இரும்பு, பாஸ்பரஸ் உள்ளிட்ட பல சத்துக்களின் கலவைகள் உள்ளன.
கல்லீரலைப் பாதுகாக்கும் : காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முருங்கை இலைகள் மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் முருங்கை இலைகள் காசநோய் எதிர்ப்பு மருந்துகளின் எதிர்மறை விளைவுகளை குறைக்கின்றன. இது மட்டுமின்றி, முருங்கை இலைகள் கல்லீரல் செல்களை சரிசெய்து, கல்லீரலை ஆக்ஸிடேட்டிவ் சேதத்திலிருந்து (oxidative damage) பாதுகாக்கிறது.