பப்பாளி இலையில் உள்ள சத்துக்கள் : பப்பாளி இலை பாக்டீரியா எதிர்ப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பப்பாளி இலைச்சாறை அருந்துவதன் மூலம் உடலுக்கு தேவையான பிளேட்லெட் செல்களின் எண்ணிக்கையை (platelet count) அதிகரிக்க முடியும். இதில் செரிமானத்துக்கு உதவும் பாப்பேன் (papain) மற்றும் சைமோபபைன் (chymopapain) போன்ற நொதிகள் நிறைந்துள்ளது. இவை, வீக்கம் மற்றும் பிற செரிமான கோளாறுகளையும் தடுக்கிறது. இதில் உள்ள ஆல்கலாய்டு கலவை (alkaloid compound), பொடுகு மற்றும் வழுக்கைக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. இலைகளில் A, C, E, K மற்றும் B வைட்டமின்களும் இருக்கின்றன. பப்பாளி இலைகளில் டீ, ஜூஸ் ஆகியவற்றை தயாரித்து உடலுக்கு எடுத்துக்கொள்ளலாம். மேலும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மாத்திரைகள் தயாரிப்பதற்கும் பப்பாளி இலை பயன்படுத்தப்படுகிறது.
டெங்கு சிகிச்சை : டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு பப்பாளி இலைச்சாறு கொடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல், சோர்வு, தலைவலி, குமட்டல், தோல் வெடிப்பு மற்றும் வாந்தி ஆகியவை டெங்குவின் பொதுவான அறிகுறிகளாகும். டெங்கு நோய் அறிகுறியை கவனிக்காவிட்டால் பிளேலெட்களின் எண்ணிக்கை குறைந்து, ரத்தப்போக்கு ஏற்படும். மிக முற்றிய நிலையில் உயிருக்கும் கூட ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பப்பாளி இலைச்சாறை மட்டுமே பயன்படுத்தி, டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. டெங்கு காய்ச்சலின்போது குறையும் பிளேலெட்டுகளை அதிகரிப்பதில், பப்பாளிச்சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.
ரத்தத்தில் சர்க்கரை சமநிலை : பப்பாளி இலைச்சாறு பெரும்பாலும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கும், ரத்தத்தில் சர்க்கரை அளவை மேம்படுத்துவதற்கும் ஒரு இயற்கை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளில் முடிவில், பப்பாளி இலைச்சாறில் ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, சமநிலை பேணுவதற்கு உதவுவதும் தெரியவந்தது. இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது.
செரிமான ஆரோக்கியம் : வாயு, வீக்கம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற செரிமான அறிகுறிகளைப் போக்க பப்பாளி இலையில் தயாரிக்கப்படும் டீ (Tea) பயன்படுத்தப்படுகிறது. பப்பாளி இலையில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பெரிய புரதத்தை சிறியதாகக்கவும், புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்களை எளிதாக ஜீரணிக்கவும் பயன்படுகிறது. இது மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்களை போக்கவும் உதவுகிறது. அதேவேளையில், செரிமான பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. பக்கவிளைவுகள் இல்லை என்பதால் முயற்சி செய்து பார்க்கலாம்.
அழற்சி எதிர்ப்பு : தசை வலி மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட உள் மற்றும் வெளிப்புற அழற்சி நிலைகளுக்கு சிகிச்சையளிக்க பப்பாளி இலை பயன்படுகிறது. பப்பாளி இலைச்சாற்றை எலிகளுக்கு கொடுத்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்தனர். அதில், கீல்வாதம் (arthritis) கொண்ட எலிகளின் பாதங்களில் வீக்கம் கணிசமாக குறைந்ததை கண்டுபிடித்தனர். இதனால், கீழ்வாதம், மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களும் பப்பாளி இலைச்சாற்றை எடுத்துகொள்ளலாம்.
முடி வளர்ச்சி அதிகரிக்க : பப்பாளி இலை சாற்றை உச்சந்தலையில் பயன்படுத்துவதால் முடி வளர்ச்சி மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். ஆனால் அதை நிரூபிக்கும் சான்றுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. உடலில் அதிக அளவு ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் முடி உதிர்வதற்கு காரணமாக உள்ளன. இதனால், ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவை உட்கொண்டால் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைப்பதுடன், முடி வளர்ச்சியையும் மேம்படுத்தலாம். பப்பாளி சாற்றில் இருக்கும் antifungal பண்புகள், மலாசீசியா (Malassezia) எனப்படும் பூஞ்சை ஏற்படுத்தும் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்துகிறது.
சரும ஆரோக்கியம் : பப்பாளி இலையை தோல்களின் மீது தடவினால் சுத்தமான மற்றும் மென்மையான சருமத்தை பெறலாம். இதில் இருக்கும் பாப்பேன் என்ற புரதத்தைக் கரைக்கும் நொதி, தோல்களில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. தோல்களில் அடைபட்டு இருக்கும் துளைகள், வளர்ந்த முடி மற்றும் முகப்பரு ஏற்படுவதைக் குறைக்கவும் பப்பாளிச் சாறு உதவுகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு : பாரம்பரிய மருத்துவ முறைகளில் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் பப்பாளி இலை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதை உறுதிப்படுத்த போதுமான ஆராய்ச்சிகள் இல்லை. அதேவேளையில், சோதனை-குழாய் ஆய்வுகளில் புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்தி பப்பாளி இலைச்சாறுகளுக்கு உண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை மனிதர்கள் அல்லது விலங்குகள் மீது பரிசோதனை செய்து உறுதிபடுத்தப்படவில்லை.
பப்பாளி இலை சாறு செய்வது எப்படி : பப்பாளிச் சாறு தயாரிப்பது மிகவும் எளிய செயல்முறையாகும். தண்ணீரில் சுத்தம் செய்த பப்பாளி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். தண்டுப் பகுதியை நீக்கிவிட்டு, முட்டைக்கோஸை நறுக்குவது போல் நறுக்கி, அதனுடன் தண்ணீரை சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர், மிக்சியில் அரைத்து எடுத்து, அந்தச் சாறை நன்றாக வடிக்கட்டி கொள்ளுங்கள். சாறு சுவையாக இருக்க உப்பு அல்லது சர்க்கரையை சேர்த்துக்கொள்ளலாம். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் 100 மி. வீதம் நாள்ளொன்றுக்கு 3 முறை எடுத்துக்கொள்ளலாம்.