உலகம் முழுவதும் கோவிட் தொற்று தாக்கிய நோயெதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் கடும் பாதிப்புகளை சந்திக்கின்றனர். ஒரு சிலர் உயிரிழக்கின்றனர். ஆனாலும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் ஒரு சில நாட்களில் நோயிலிருந்து மீண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவிட் நோயாளிகள் அவர்களின் பழைய இயல்பு வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்கும், முழு ஆரோக்கியத்தை பெறவும் மறுவாழ்வு திட்டத்தை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். கோவிட் நோயாளிகளுக்கான மறுவாழ்வு திட்டத்தை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவம் மறுவாழ்வு நெட்வொர்க் (johns Hopkins Medicine Rehabilitation Network) பரிந்துரைத்துள்ளது.
கோவிட் -19 உடல் ரீதியாக மட்டுமின்றி, மனரீதியாகவும் நோயாளிகளை பாதிக்கிறது. எனவே தாங்கள் பரிந்துரைக்கும் புனர்வாழ்வு முயற்சிகள், கோவிட் நோயாளிகளை ஆரோக்கியமாக மீட்டெடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. இது நோயாளிகளை முந்தைய வாழ்க்கைத் தரத்திற்கு மீண்டும் திரும்ப உதவுகிறது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின் கூறி உள்ளது. பலவீனம், சோர்வு மற்றும் மூச்சுத் திணறல், நடைபயிற்சி மற்றும் அன்றாட பணிகளைச் செய்வதில் சிரமம் ஆகியவை தொற்றினால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள்.
இயல்பாக இருக்க விடாத இந்த உடல் குறைபாடுகளை கோவிட் நோயாளிகள் அனுபவிக்கும் போது, அது அவர்களுக்கு ஒருவித மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தொற்றை பற்றிய பயம் மற்றும் மனச்சோர்வு இரண்டுமே கோவிட் நோயாளிகளின் உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். இதனிடையே உடல் மற்றும் மன ஆரோக்கியம் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதே நோக்கமாக கொண்ட உடற்பயிற்சி மற்றும் செயல்பாட்டின் மூலம் நோயிலிருந்து விரைவாக மீள முடியும்.
வீட்டில் சுய-தனிமைபடுத்தலில் இருக்கும் போதே இவற்றை செய்யலாம். கோவிட் நோயாளிகளை மீட்டெடுப்பதில் இயக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. பயிற்சிகள் மூலம் இயங்குவது அல்லது இயங்க முயற்சிப்பது உடலை குணப்படுத்துகிறது மற்றும் மனதை மீட்டெடுப்பதற்கும் உணர்ச்சிகளைத் தணிப்பதற்கும் சிறந்த வழியாகும்.எனவே பயிற்சிகள் மற்றும் இயக்கங்களுடன் மீட்பு மற்றும் குணப்படுத்தும் செயல்முறையை துவக்கலாம் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறியுள்ளது.