உங்களுக்கு பிசிஓஎஸ் இருப்பதுபோல் அறிகுறிகள் தெரிகிறதா..? உடனே இந்த வாழ்க்கை முறைக்கு பழக்கிக்கொள்ளுங்கள்..!
இது முறையற்ற வாழ்க்கை முறையினால் உண்டாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு உங்களுக்கும் பிசிஓஎஸ் அறிகுறிகள் இருந்தால் இந்த வாழ்க்கைமுறையை தினசரி கடைபிடியுங்கள்.

இன்று பிசிஓஎஸ் என்னும் வார்த்தை பெண்கள் மத்தியில் சகஜமாகிவிட்டது. எங்கோ யாருக்கோ கேட்டது இன்று எனக்கே வந்துவிட்டதே என நினைக்கும் அளவிற்கு இந்த பிரச்னை உலகம் முழுவதும் உதிக்கத் துவங்கிவிட்டது. கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகள் வளர்ந்து மாதவிடாயை தடை செய்வதுதான் இந்த பிசிஓஎஸ் பிரச்னை. இது முறையற்ற வாழ்க்கை முறையினால் உண்டாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு உங்களுக்கும் பிசிஓஎஸ் அறிகுறிகள் இருந்தால் இந்த வாழ்க்கைமுறையை தினசரி கடைபிடியுங்கள்.

ஆரோக்கியமான உடல் எடை : பிசிஓஎஸ் என்றாலே முதல் காரணம் அதிக உடல் எடை. இதனால் உடல் எடை அதிகரிப்பதும் இருக்கும். எனவே உடல் எடை அதிகரித்தால் அதைக் குறைத்து ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்து வாருங்கள். அதற்கு உடற்பயிற்சி, யோகா , டயட் போன்ற விஷயங்களை பின்பற்றுங்கள்.

டயட் : நீங்கள் முறையான உணவுப் பழக்கத்திற்கு கட்டாயம் மாற வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அதாவது தானிய உணவு, பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள்,பழங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். வெளிப்புற உணவுகளை முற்றிலும் தவிர்த்து வீட்டு உணவுகளை ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிட வேண்டும்.

இரும்புச்சத்து நிறைந்த உணவு : பிசிஓஎஸ் பிரச்னையில் சிலருக்கு அதிக உதிரப்போக்கு இருக்கும். இதனால் அனீமியா, இரத்தக் குறைபாடு போன்ற பிரச்னைகள் வரலாம். எனவே இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளுங்கள். அயர்ன் மாத்திரைகளை உட்கொள்வதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

நீரேற்றமாக இருங்கள் : உடலில் எப்போதும் நீர் இருப்பது அவசியம். எனவே நிறைய தண்ணீர் குடிக்க மறவாதீர்கள். உங்களுக்கு நீர் வறட்சி அடிக்கடி ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் தண்ணீர் நிறைய குடிப்பது நல்லது.

டீடாக்ஸ் : உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் முறைக்குதான் டீடாக்ஸ் என்று பெயர். இப்படி செய்வதால் இன்சுலின் அளவு அதிகரிப்பது, ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். இதற்கு கிரீன் டீ, துளசி டீ, டீடாக்ஸ் பானங்கள் போன்றவற்றை பருகலாம்.

மன அழுத்ததை கட்டுப்படுத்துங்கள் : நீங்கள் அதிக மன அழுத்ததை தலையில் போட்டுக்கொள்வதால் ஹார்மோன் சமநிலையின்மை உருவாகும். இதனால் பிசிஓஎஸ் பிரச்னையின் தீவிரம் அதிகமாகும். ஒருவேளை நீங்கள் அதிகம் கோபப்படக்கூடிய நபர், மன அழுத்தம் உள்ளது, நிம்மதியில்லை எனில் யோகா, தியானம் , நடனம் என நிம்மதிக்கான வழிகளை தேடுங்கள்.

நிறைவான உறக்கம் : இரவு தூக்கம் கட்டாயம். குறைந்தது 7-8 மணி நேர உறக்கம் உங்கள் உடலுக்கான சீராக ஓய்வைத் தரும். இதனால் உடல் தன்னுடைய வேலைகளையும் சிறப்பாக செய்யும். உடல்நல பாதிப்புகள் தீவிரமடையாமல் இருக்க தூக்கத்தை தவிர்க்காதீர்கள். தூக்க நேரத்தையும் கட்டுப்படுத்தாதீர்கள்.