இன்று இருக்கும் காலக் கட்டத்தில், சர்க்கரை நோய், இதய நோய், அதிக இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்றவை பொதுவானவை ஆகிவிட்டன. இது பெரும்பாலும் நம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையின் காரணமாகவே ஏற்படுகின்றன. ஏனெனில், நாம் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதால், கடினமாக உழைப்பதில்லை. நொறுக்குத் தீனி போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வதால், அதிக கொலஸ்ட்ரால் சகஜமாகிவிட்டது. அதிக கொலஸ்ட்ரால் இருந்தால், மாரடைப்பு ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.
இவை எல்லாம் தவிர்க்க கண்டிப்பாக நாம் நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து காய்கறி பழங்கள் போன்ற சத்தான உணவுகளை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே நாம் இதனை எல்லாம் சரி செய்துவிட்டால், இயற்கையாகவே நம்மால் உடலில் உள்ள தேவை இல்லாத கொழுப்பை கரைத்து விட முடியும்.
வறுத்த கொண்டைக் கடலை மற்றும் பாதாம் ஆகியவற்றை பொடி செய்து, மாவாக அரைத்து வைத்துக் கொள்ளலாம். அதனை கஞ்சி போல் செய்து தினமும் குடிக்கலாம். பாதாம் பருப்பிலும் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடண்டுகள் உள்ளன. இதுவும் அதிகப்படியாக உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுக்குள் கொண்டு வர உதவியாக இருக்கும். அதோடு, இது உங்கள் பசியைப் போக்கி, உடல் எடையைக் குறைத்து ஃபிட் ஆக இருப்பதற்கும் உதவியாக இருக்கும்.
அதே போல், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் போன்ற காய்கறிகளை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சேர்த்துக் கொள்ளும் போது, அது ஒரு சில நாட்களிலேயே கொலஸ்ட்ரால் அளவை 5% குறைத்து விடக்கூடும். கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் ஓட்ஸ் கஞ்சி கூட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது போல, தினமும் அரை கப் ஓட்மீலை ஸ்ட்ராபெர்ரியுடன் கலந்து சாப்பிட்டால் விரைவான பலன் கிடைக்கும்.