கொரோனா தொற்றின் முதல் அலையை விட இரண்டாம் அலை மிக வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் மிகவும் கொடியது மற்றும் ஆபத்தானது. இது ஏற்படுத்தும் புதிய அறிகுறிகளையும், உடல் நோய்களையும் நம்மால் அவ்வளவு எளிதாக புறக்கணிக்க முடியாது. முதல் அலையை காட்டிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, இந்தியா முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கோவிட்-19 பாதிப்புகள் நாட்டில் வேகமாக அதிகரித்து வருகின்றன. பாதிப்பு அதிகரித்த எந்த மாநிலங்களிலும் தொற்றின் வேகம் மேலும் தீவிரமாகியுள்ளதே தவிர இன்னும் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸின் புதிய திரிபு கவலைக்குரிய புதிய பல அறிகுறிகளை கொண்டுள்ளது. ஆக்ஸிஜன் படுக்கைகள், பிளாஸ்மா மற்றும் பிற மருத்துவ வசதிகளுடன் போராடுவதைத் தவிர, உண்மையில் தொற்றின் இரஃண்டாம் அலையால் ஏற்பட்டுள்ள புதிய அறிகுறிகளை மக்கள் புரிந்து கொள்ள முடியவில்லை.
வழக்கமாக தொற்றால் பாதிக்கப்பட்டால் ஏற்படும் காய்ச்சல், சளி, இருமல், சுவை இழப்பு, வாசனை திறனில் ஏற்படும் பிரச்சனை உள்ளிட்டவற்றை தவிர மேலும் பல புதிய அறிகுறிகள் இந்த இரண்டாம் அலையில் மக்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. கோவிட் வைரஸின் புதிய பிறழ்வு மிகவும் ஆபத்தான ஒன்றாக இருக்கிறது. இரண்டாவது அலையில் பரவி வரும் வைரஸ் தொற்றானது வயது முதிர்ந்த மற்றும் நடுத்தர வயதுடையவர்களை மட்டும் பாதிக்காமல் இது இளைய வயதினரையும் பாதித்து வருகிறது.
சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, தீவிர சோர்வு மற்றும் பிளேட்லெட் எண்ணிக்கையில் (platelet count- ரத்த அணுக்களின் எண்ணிக்கை) ஏற்படும் திடீர் வீழ்ச்சி ஆகியவை கோவிட்-19 தொற்றின் அறிகுறியாக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கையாளும் மருத்துவர்கள் கூறுகையில், சமீப காலமாக கொரோனா நோயாளிகளில் பலர் உலர்ந்த சளிச்சவ்வு பத்திகளை (drier mucous membrane passages) கொண்டுள்ளதாகவும், பலவீனத்தின் விவரிக்க முடியாத உணர்வுகளை அனுபவிப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
எனவே ஒருவருக்கு தீவிர பலவீனம், சோர்வு, காய்ச்சல் மற்றும் தொண்டை எரிச்சல் இருந்தால், அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். மேற்காணும் அறிகுறிகள் இருப்பவர்கள் முதலில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். பின்னர் தொற்று தம்மை பாதித்துள்ளதா என்று டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முடிவுக்கு ஏற்றார் போல தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டும். நீர்சத்து அதிகம் தேவை என்பதால் நிறைய தண்ணீர் மற்றும் திரவங்களை குடித்து கொண்டே இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு மற்றும் ஆலோசனைக்காக மருத்துவரை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கோவிட்-19 மற்ற அறிகுறிகள் : காய்ச்சல், உடல் வலி, வாசனையிழப்பு மற்றும் சுவை இழப்பு, குளிர், மூச்சுத் திணறல் ஆகியவை பொதுவான கோவிட்-19 அறிகுறிகளில் அடங்கும். பல ஆய்வுகள் இளஞ்சிவப்பு கண்கள், காஸ்ட்ரோனமிகல் நிலைமைகள் மற்றும் செவித்திறன் குறைபாடு ஆகியவற்றை இந்த சூழலில் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது என்று அறிவுறுத்துகின்றன.