நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வெகுவாக குறைந்துவிட்ட நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. விரைவில் மூன்றாம் அலை அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், கவலை அளிக்க கூடிய கொரோனா வேரியன்ட் என்று உலக சுகாதார நிறுவனத்தால் குறிப்பிடப்பட்டுள்ள டெல்டா வைரஸ் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் அதிதீவிரமாக பரவி மக்களை பாதிப்படைய செய்து வருகிறது.
எனவே கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நாம் பின்பற்றி வரும் நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாக பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில், அது மட்டும் கொரோனா வேரியன்ட்டிலிருந்து முழுப்பாதுகாப்பு அளித்து விடும் என்று எடுத்து கொள்ள முடியாது. மாஸ்க் அணிவதற்கான தேவை முன்பை விட தற்போது இன்னும் அதிகரித்துள்ளது. அதுவும் ஒரே நேரத்தில் 2 மாஸ்க்குகளை அணிந்து கொண்டு வெளியே செல்வது மிகவும் பயனுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிக்கு பின்னரும் மாஸ்க் அணிவது ஏன் முக்கியம்? டெல்டா வேரியன்ட் மற்றும் கூடுதல் சிக்கல்களுக்கு எதிராக தடுப்பூசிகள் நல்ல பாதுகாப்பை வழங்கினாலும் கூட, கோவிட்-19 அச்சுறுத்தல் தொடரும் நிலையில் மாஸ்க் அணியும் பழக்கம் அடிப்படை நிலை பாதுகாப்பை உறுதி செய்கின்றன. தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் மாஸ்க் அணிவது, அவரிடமிருந்து பிறருக்கு அந்த வைரஸ் பரவுவதை தடுக்கிறது. பாதிக்கப்படாதவருக்கு வைரஸ் துகள்களின் தாக்குதல் அபாயத்தை கணிசமாக குறைக்கிறது. இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது இரட்டை மாஸ்க் பயன்பாடு நல்ல பலனை தந்தது. ஏனெனில் இது இரட்டை பாதுகாப்பு வரம்பை வழங்குகிறது மற்றும் வைரஸ்கள் அடங்கிய சுவாச துளிகளின் பரவலை குறைக்கிறது. நீங்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும், இன்னும் மாஸ்க் பயன்படுத்த வேண்டிய சில ஆபத்தான இடங்கள் இருக்கின்றன.
உள்ளரங்க அமைப்புகள் (Indoor settings) : நிறைய திறந்தவெளி மற்றும் குறைவான கூட்டம் இருக்கும் பகுதிகளை ஒப்பிடும் போது பொதுவாக உள்ளரங்க பகுதிகள் மோசமாக காற்றோட்டமான இடங்களாக இருக்கும் என்பதால் காற்றின் மூலம் வைரஸ் துகள்கள் குடியேற ஒரு சிறந்த இடமாக இருக்கும். இதனால் வைரஸ் பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள அமைப்பாக மாறும். ஓரளவு தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் அல்லது தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் உட்புற இடங்களில் இருக்கும் போது, முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உள்ளரங்க அமைப்புகளை அடிக்கடி கிருமி நீக்கம் செய்தல், தேவையான காற்றோட்டத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக ஒருவர் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும் மாஸ்க் அணிந்து அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பகுதியாகும்.
கூட்டங்களில் கவனம்..தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும் இன்னும் இரண்டாம் அலை மிச்சம் இருக்கிறது. மூன்றாம் அலை விரைவில் வரலாம். எனவே இயல்புநிலைக்கு திரும்ப வேண்டிய நேரம் இது கிடையாது. தடுப்பூசிகள் ஒரு குறிப்பிட்ட அளவிலான உறுதியை அளித்தாலும், அதற்காக எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற தேவையில்லை என்பது கிடையாது. ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் கூடுவது, சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணியாமல் இருப்பது உள்ளிட்ட செயல்கள் பெரிய அச்சுறுத்தலுக்கு காரணமாக அமையும் வாய்ப்பு அதிகம். தவிர்க்க முடியாமல் திருமணங்கள், ஊர்வலங்கள் அல்லது இறுதிச் சடங்குகள் போன்ற கூட்டம் காணப்படும் இடங்களுக்கு சென்றால் அங்கு மாஸ்க்கை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லதல்ல. சிறிய அளவிலான கூட்டம் கூட இந்த நேரத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் மாஸ்க் அணிவதில் இருந்து விலக கூடாது.
மளிகை கடை & ஷாப்பிங்..மளிகை கடைகள் மற்றும் ஷாப்பிங் பகுதிகள் இப்போதும் ஆபத்துள்ளவை தான். உலகம் முழுவதும் கொரோனா பரவ துவங்கும் முன்பே மளிகை மற்றும் ஷாப்பிங் மால்கள் தொற்று பரவும் அபயம் உடைய பகுதிகளாக கருதப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தொற்று பாதிப்புகள் குறைந்து காணப்பட்டாலும் இப்போதும் இவை அதிக ஆபத்துள்ள இடங்கள் தான் என்பதை உணர வேண்டும். மளிகை கடை மற்றும் ஷாப்பிங் செல்வது அவசியமானதாக இருந்தாலும் கூட தடுப்பூசி போட்டுள்ளதால் மாஸ்க் அணியாமல் செல்லலாம் என்ற எண்ணத்தில் செயல்பட கூடாது.
அதிக மக்கள் கூடும் இடம் என்பதால் கடைகளுக்கு செல்லும் போது முடிந்தால், இரட்டை மாஸ்க் அணிந்து செல்வது கூடுதல் பாதுகாப்பை தரும். அதிக ஆபத்துள்ள மேற்பரப்புகள் கடைகளில் இருப்பதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம் என்பதால் தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட ஒருவர் தன் ஆரோக்கியத்தை பாதுகாக்க மாஸ்க் அணிந்து மேற்காணும் இடங்களுக்கு செல்வது அவசியம். கூடவே சானிடைசர் எடுத்து சென்று அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்தி கொள்வதும் முக்கியம்.
போக்குவரத்து மற்றும் பொது இடங்கள்..மக்கள் வழக்கம் போல பேருந்து, ரயில்களில் அதிகம் பயணம் செய்ய துவங்கி உள்ளதால் தொற்றுநோய்க்கான ஆபத்து எப்போதும் இருக்கிறது. தொற்று பாதிப்புகள் குறைந்து இருப்பதால் பயணம் செய்யும் போது பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்க தேவையில்லை. கொரோனா காலத்திற்கு முன்பாக இயல்பாக பயணம் செய்தது போல இப்போது பயணிக்கலாம் என்று நினைக்க கூடாது. பொது போக்குவரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமற்றது. பேருந்து, ரயில் அல்லது விமானம் மூலம் பயணம் செய்யும் போது கூட, தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடப்படாத நபர்கள் இரு தரப்பினரும் இருப்பார்கள். இதை நினைவில் கொண்டு உங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு மாஸ்க் அல்லது இரட்டை மாஸ்க் அணிந்து கொண்டு பயணிப்பது சிறந்த வழி.