இன்றைய காலகட்டத்தில் இளைய சமுதாயத்தினரிடையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் இந்த நோய் பாதிப்பு ஏன் அதிகரித்து வருகிறது என்பதற்கான காரணங்கள் உறுதியாக தெரியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் பெண்கள் மற்றும் டயட் பற்றிய ஒரு புதிய ஆய்வில், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் ஏற்படுவதற்கு சர்க்கரை நிறைந்த இனிப்பான பானங்களும் முக்கிய பங்கு வகிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
50 வயதிற்கு குறைவானவர்களில் பெருங்குடல் புற்றுநோயின் விகிதம் சமீபத்திய ஆண்டுகளில் கடுமையாக அதிகரித்துள்ளது. 1950ம் ஆண்டில் பிறந்தவர்களுடன் ஒப்பிடும்போது, 1990ல் பிறந்தவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய்க்கான இரு மடங்கு ஆபத்தும், மலக்குடல் புற்றுநோய்க்கான நான்கு மடங்கு ஆபத்தும் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் சர்க்கரை நிறைந்த இனிப்பான பானங்களின் விற்பனை குறைந்து வரும் நிலையில், 1977 மற்றும் 2001க்கு இடையில் சர்க்கரை பானங்களை உட்கொள்பவர்களின் கலோரி சதவீதம் வியத்தகு அளவில் உயர்ந்தது. அதாவது இந்த இடைப்பட்ட ஆண்டுகளில், 19 முதல் 39 வயதினரிடையே இந்த எண்ணிக்கை மொத்த கலோரிகளில் 5.1 சதவீதத்திலிருந்து 12.3 சதவீதமாக உயர்ந்தது. அதேபோல 18 மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகளில் கலோரிகளின் எண்ணிக்கை 4 சதவீதத்திலிருந்து 10.3 சதவீதமாக உயர்ந்தது. இதுவே, 2014ம் ஆண்டு வாக்கில் அந்த புள்ளிவிவரங்கள் வெகுவாக குறைந்துவிட்டன.
ஆனால் ஒட்டுமொத்தமாக அமெரிக்கர்கள் உட்கொள்ளும் கலோரிகளில் 7 சதவீதம் இன்னும் சர்க்கரை பானங்களிலிருந்தே வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Gut என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த புதிய ஆய்வில், 1991 முதல் 2015 ஆகிய இடைப்பட்ட காலத்தில், நீண்டகால சுகாதார ஆய்வில் சேர்ந்த 94,464 பதிவுசெய்யப்பட்ட பெண் செவிலியர்களில் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் இனிப்பு பானங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆய்வு செய்தது. அப்போது இவர்களுக்கு 25 முதல் 42 வயது இருக்கும்.
அதேபோல 13 முதல் 18 வயதிற்குட்பட்ட 41,272 செவிலியர்களின் துணைக்குழுவையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் சாப்ட் ட்ரிங்க்ஸ், ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸ் மற்றும் இனிப்பு தேநீர் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதேபோல் பழச்சாறு நுகர்வுகளில் - ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சைப்பழம், கத்தரிக்காய் மற்றும் பிறவற்றையும் ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்தனர்.
சராசரியாக 24 வருட பின்தொடர்தலில், செவிலியர்களிடையே 109 பேருக்கு பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல இளையவர்களில் பெருங்குடல் புற்றுநோய்க்கான முழுமையான ஆபத்து சற்று குறைவாகவே இருந்தது. ஆனால் ஒரு வாரத்தில் சராசரியாக ஒரு 8 அவுன்ஸ் சர்க்கரை இனிப்பு பானங்களை குடிக்கும் பெண்களுடன் ஒப்பிடும்போது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட 8-அவுன்ஸ் சர்க்கரை பானங்களை குடித்தவர்களுக்கு இந்த நோய்க்கான ஆபத்து இரு மடங்கிற்கும் மேல் அதிகரித்து இருந்தது கண்டறியப்பட்டது. இனிப்பு பானங்களின் ஒவ்வொரு கூடுதல் சேர்க்கையும் நோய்க்கான ஆபத்தை 16 சதவீதம் அதிகரித்தது.
இளம் பருவத்தில் ஒரு நாள் குடிப்பது 32% அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்க்கரை பானங்களுக்கு பதிலாக காபி அல்லது குறைக்கப்பட்ட கொழுப்புள்ள பாலை குடித்து வருபவர்களிடையே நோய்க்கான ஆபத்து 17 சதவீதம் முதல் 36 சதவீதம் வரை குறைவு என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இருப்பினும் ஆரம்பகால பெருங்குடல் புற்றுநோய்க்கும் பழச்சாறு அல்லது செயற்கை இனிப்புப் பானங்களை உட்கொள்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இனம், உடல் நிறை குறியீட்டெண், மாதவிடாய் நின்ற ஹார்மோன் பயன்பாடு, புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் உடல் செயல்பாடு உள்ளிட்டவை பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் பல்வேறு காரணிகளாக பகுப்பாய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பை மட்டுமே காட்டியதே தவிர அதற்கான காரணத்தையும் விளைவையும் நிரூபிக்க முடியவில்லை. ஆனால் ஆராய்ச்சியில் ஈடுபடாத கொலம்பியா மெயில்மேன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் தொற்றுநோயியல் உதவி பேராசிரியர் நவுர் மகரேம், “ சோடாவை அதிக அளவில் உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய்க்கான அதிக ஆபத்துடன் தொடர்புடையது என்பதற்கான புதிய சான்றுகள் கிடைத்துள்ளன.
சர்க்கரை-இனிப்பு பானங்கள் எடை அதிகரிப்பு, குளுக்கோஸ் ஒழுங்குபடுத்தல் மற்றும் பலவற்றோடு இணைக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் அறிவோம், அவை ஆபத்து காரணிகளும் கூட. எனவே இந்த உறவுகளுக்கு அடித்தளமாக இருக்கும் ஒரு நம்பத்தகுந்த வழிமுறை உள்ளது” என்று கூறியுள்ளார். இதுகுறித்து ஆய்வின் மூத்த எழுத்தாளர், செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் இணை பேராசிரியர் யின் காவ் கூறியதாவது, வயதானவர்களை விட இளைய மக்களில் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உயர் கொழுப்பு போன்ற வளர்சிதை மாற்ற பிரச்சினைகள், அத்துடன் குடலில் ஏற்படும் அழற்சி போன்றவை புற்றுநோய்க்கான காரணங்களாக இருக்கலாம். ஆனால் சரியான சாத்தியமான வழிமுறைகள் இன்னும் சுட்டிக்காட்டப்படவில்லை" என்று தெரிவித்தார்.