குளிர்காலம் வந்தாலே பல உடல் நலப்பிரச்சனைகளையும் நம்முடன் சேர்ந்தே பயணிக்கிறது. குறிப்பாக சளி, இருமல் தொடங்கி தோல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளையும் நாம் சந்திக்க நேரிடுகிறது. ஆனால் குளிர்காலத்தில் நமது சருமம் போன்று கண்களும் வறண்டு விடும் என்பது தெரியுமா? ஆம் குளிர்காலத்தில் நிலவும் குளிர்ந்த ஈரப்பதம், குளிரான வெப்பநிலை மற்றும் குளிர்ந்த காற்றின் காரணமாக கண்கள் வறண்டு போகிறது. இதோடு குளிரை சமாளிப்பதற்காக நாம் பயன்படுத்தும் ஹீட்டர்களினாலும் கண்கள் பாதிப்பு என்பது இயல்பான ஒன்றாகிவிட்டது. இதனால் கண்கள் சிவத்தல், கண்களில் எரிச்சல், கண்களுக்கு வறட்சி போன்றவை ஏற்படுகிறது என்பதால், குளிர்காலத்தில் கண்களைப் பராமரிப்பது என்பது சவாலான விஷயம். இருந்தப் போதும் சில விஷயங்களை நீங்கள் முறையாக பின்பற்றினாலே கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நாம் சரிசெய்ய முடியும் என்கின்றனர் கண் மருத்துவர்கள். எப்படி? என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
குளிர்காலத்தில் கண்களைப் பராமரிக்கும் வழிமுறைகள் : உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும் : கோடைக்காலங்களில் நிலவும் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் தண்ணீர் குடிக்கும் பழக்கம் அதிகளவில் மேற்கொள்வோம். ஆனால் குளிர்காலத்தில் தண்ணீர் அதிகளவில் பலர் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். இதனால் உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. இதனால் பல உடல் நல பிரச்சனைகளும் ஏற்படுகிறது. எனவே உங்களது உடலை ஹைட்ரேட் செய்வதற்கு தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் எப்போதும் குடிக்க வேண்டும்.
சன் கிளாஸ் அணிதல் : வெயில் காலத்தில் தான் சன் கிளாஸ் அணிய வேண்டும் என்பது இல்லை. அதிகம் பனிப்பொழிவு உள்ள பகுதிகளில் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் அதிகளவில் வெளியாகும். இதன் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில், நமது கண்களைப் பாதுகாக்க நல்ல தரமான சன் கிளாஸ்களை அணிய வேண்டும்.
மிதமான அறை வெப்பநிலை : பொதுவாக குளிர்காலம் என்றாலே நமது அறைகளைக் கதகதப்பாக வைத்துக் கொள்வதற்கு ஹீட்டர்களை நாம் பயன்படுத்துவோம். ஆனால் இது முற்றிலும் தவறு. எனவே உங்களது அறையில் கொஞ்சம் ஈரப்பதத்துடன் இருப்பதற்கு ஜன்னல்களை திறந்து வைக்கவும். இதனால் உங்களது சருமம் மற்றும் கண்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
இதோடு குளிர்காலத்தில் சூரியன் விரைவில் அஸ்தமானமாகும் என்பதால் உங்களது வீட்டிற்கு போதுமான வெளிச்சத்தை இருப்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகளவில் விளக்குகள் போடுவதைத் தவிர்த்து வீட்டிற்குள் வேலை செய்யும் போது நல்ல வெளிச்சத்திற்காக ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும். இதுப்போன்ற வழிமுறைகளை நீங்கள் முறையாக பின்பற்றியும், கண்களின் வறட்சி மற்றும் அலர்ஜி ஏற்படுகிறது என்றால், உடனடியாக கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.