ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு மீண்டும் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்திக் கொள்ளவும், தொற்று பாதிப்பில் இருந்து மீளவும் பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர்.விட்டமின்கள், ஊட்டச்சத்து சப்ளிமென்ட்டுகள் போன்றவை மிக அதிகப்படியாக விற்பனையாக தொடங்கியுள்ளன. இதில் மினரல்கள், அமினோ அமிலங்கள், என்ஜைம், தாவர மருந்துகள் போன்றவையும் அடங்கும். கடந்த ஆண்டில் 73 சதவீத ஆஸ்திரேலியர்கள் ஊக்க மருந்துகளை வாங்கி பயன்படுத்தியுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பாதிப்பை குறைக்க உதவும்: பிரிட்டன், அமெரிக்கா, ஸ்வீடன் போன்ற நாடுகளில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அறிகுறிகளை ஆய்வு செய்யும் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் உள்ள தகவல்களை ஆய்வு செய்ததில், மல்டிவிட்டமின்கள், புரோபயாடிக்ஸ் மற்றும் விட்டமின் டி போன்ற சத்துகளை எடுத்துக் கொள்வதால் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.
அச்சம், புறக்கணிப்பு, ஆய்வு முடிவுகள் : மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் நிறுவனங்களிடம் இருந்துதான் பொதுமக்கள் ஊக்க மருந்துகளை வாங்குகின்றனர். ஊரடங்கு, தனிமனித இடைவெளி மற்றும் தனிநபர் சுகாதாரம் குறித்து வெளியான செய்திகள் போன்ற காரணங்களால் ஓரளவு அச்சம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக ஊக்கமருந்துகளை வாங்கத் தொடங்கினர்.சிலர் ஊக்க மருந்துகள் குறித்து சமூக வலைதளங்களிலும், நண்பர்களுக்கும் பரிந்துரை செய்ய தொடங்கினர். அதே சமயம், இந்த மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஞ்சிய பலர் அதை புறக்கணிக்கின்றனர்.இதற்கிடையே, கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு தருவது எது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இதில், விட்டமின் சி, விட்டமின் டி, ஸிங்க் மற்றும் செலீனியம் போன்ற சத்துகளின் குறைபாடு இருப்பவர்களுக்கு தொற்று ஏற்படலாம் என்பது தெரியவந்தது.
தகவல்தொற்று காலம் :ஒரு பக்கம் கொரோனா என்னும் பெருந்தொற்று நோய் மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயம், மருத்துவர்களின் பரிந்துரை எதுவும் இல்லாமல், இதை சாப்பிட்டால் சரியாகும், அதை சாப்பிட்டால் சரியாகும் என சகட்டு மேனிக்கு தகவல்களை பரப்பி அச்சமூட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதாவது இதனை தகவல்தொற்று காலம் என்றே குறிப்பிடலாம்.
விட்டமின் ஏ முதல் ஸிங்க் வரை :ஸிங்க், விட்டமின் சி போன்ற ஊக்க மருந்துகளை அதிகம் எடுத்துக் கொள்கிறபோது அதன் மூலமாக பலன் ஏற்படுகிறதா என்ற ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. இதில், 520 நபர்களுக்கு ஊக்க மருந்துகள் கொடுத்து பரிசோதிக்கப்பட்ட போதிலும், அந்த ஆய்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஏனென்றால், அந்த மக்களுக்கு குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.
கொஞ்சம் பலன் உண்டு :கொரோனாவுக்கு எதிராக பல்வேறு விதமான ஊக்கமருந்துகளை மக்கள் எடுத்து வருகின்றனர் என்றாலும் கூட, விட்டமின் டி, விட்டமின் சி அல்லது ஸிங்க் போன்றவை தொற்று பாதிப்பை குறைக்க பெருமளவில் உதவுகிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, மருத்துவமனையில் அனுமதிக்க தேவையில்லை என்ற சூழல் அல்லது இறப்பை தவிர்க்கிறது.
அதிக பாதிப்பு கொண்டது : என்னதான் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கினாலும், மற்றொரு பக்கம் இந்த ஊட்டச்சத்துகளால் ஏற்படும் பாதிப்புகள் சற்று அதிகம். விட்டமின் டி மூலமாக தசை வலி, விட்டமின் ஏ மூலமாக கல்லீரல் செயல்பாடு பாதிப்பு மற்றும் மங்கலான கண் பார்வை, விட்டமின் இ மூலமாக இரத்தக்கசிவு, மெக்னீசியம் மூலமாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், செலீனியம் மூலமாக முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.