இன்று பலருக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது உடல் பருமன். அதிக எடை காரணமாக இளம் வயதினர் கூட பல்வேறு நோய்களுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. எடை குறைப்பிற்காக பல்வேறு டயட் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இதனிடையே பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ள தயிர், எடை இழப்பை ஊக்குவிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. எடை குறைப்பில் தயிருக்கு எந்தளவு பங்கு இருக்கிறது என்பதை பற்றியும்.
தினசரி டயட்டில் தயிர் எடுத்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் பார்க்கலாம். பொதுவாக எடை குறைப்பு முயற்சியில் நாம் எடுத்து கொள்ளும் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. எண்ணெய் நிறைந்த உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு மாற்றாக ஆரோக்கியமான, புரதச்சத்து நிறைந்த உணவுகள் உடலில் இருக்கும் தேவையற்ற எடையை இழக்க மிகவும் உதவும்.
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், வைட்டமின் பி -2, வைட்டமின் பி -12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. தயிர், ரத்த அழுத்தத்தை குறைக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, நோயை உருவாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட என பல வகைகளிலும் நமக்கு நன்மைகளை அளிக்கிறது.
International Journal of Obesity இதழில் வெளியான ஆய்வின் படி, ஒரு நாளைக்கு மூன்று முறை கொழுப்பில்லா தயிரை உட்கொண்டவர்கள், 22% அதிக எடை மற்றும் 61% அதிக உடல் கொழுப்பை இழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தயிரில் பல வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் தேவையற்ற ஆரோக்கியமில்லா உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க செய்கிறது.
எடை குறைக்க உதவும் புரதம் : உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு தயிரில் இருக்கும் ஒரு நல்ல அளவு புரதம் பெரிதும் உதவுகிறது. ஒரு கப் தயிரில் 8.5 கிராம் புரதம் உள்ளது. ஒரு கப் குறைந்த கொழுப்புள்ள தயிரில் 13 கிராம், கொழுப்பு இல்லாத ஒரு கப் தயிரில் 10 கிராம் புரதம் இருக்கிறது. தயிரில் இருக்கும் புரதம் பசியுணர்வை கட்டுக்குள் வைத்து தேவையற்ற ஸ்னாக்ஸ்களை சாப்பிடுவதை தவிர்க்க செய்கிறது.