குழந்தைக்கு பாலூட்டுவது தான் புதிய தாய்மார்கள் எதிர்கொள்ளும் சவாலான காரியம் ஆகும். பச்சிளம் குழந்தைகளுக்கு போதுமான அளவுக்கு பாலூட்டி இருக்கிறோமா என்பது குறித்து பல விதமான மனக் குழப்பங்கள் அவர்களது மனதில் ஏற்படக் கூடும். குழந்தைக்கு பாலூட்டுவது இயற்கையான விஷயம் தான் என்றாலும் கூட, அனைத்து தாய்மார்களும் அதில் உள்ள நுணுக்கங்களை அறிந்து செயல்படுவது கடினம் தான்.
ஒவ்வொரு முறை பாலூட்டும்போதும் ஒவ்வொரு அனுபவம் தாய்மார்களுக்கு கிடைக்கும். குழந்தைக்கு போதுமான அளவு பாலூட்டுவதற்கு என்ன உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று பலரும் சரியாக கணித்து விட முடியாது. இதனால், அவ்வபோது மாற்றங்களைச் செய்து கொண்டே இருப்பார்கள். இருப்பினும், பாலூட்டுவது குறித்த அடிப்படையான தகவல்களை தெரிந்து கொண்டால், தாய்மார்கள் வெகு விரைவில் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள முடியும்.
வெளிப்படையாக இருக்க வேண்டும் : முறையாக பாலூட்டுவது எப்படி என்பது குறித்து, உங்களை சுற்றியுள்ள அனுபவம் வாய்ந்த பெண்கள் பலர் அறிவுரை சொல்லக் கூடும். அவை சரியானவை என்றாலும் கூட, எடுத்த எடுப்பிலேயே அப்படியே பின்பற்றிவிட வேண்டும் என நினைக்காதீர்கள். அந்த உத்தி உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் பொருத்தமாக இருக்கிறதா என்பதை பொறுமையாக ஆராய்ந்து பார்த்து செயல்படுத்த வேண்டும். வாய்வழி தகவல்களைக் காட்டிலும், பாலூட்டுவது தொடர்பாக புத்தகங்கள் மற்றும் செய்திகளைப் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியமான உணவு முக்கியமானது : குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே உணவு ஆகும். அவர்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை தாய்ப்பால் மூலமாகவே கிடைக்கிறது. ஆகவே, தாய்மார்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் சாப்பிடும் எந்தவொரு உணவுப் பொருளும் தாய்ப்பால் ரூபத்தில் உங்கள் குழந்தைக்கு சென்று சேரும். இத்தகைய சூழலில், நீங்கள் ஆரோக்கியமாக சாப்பிடவில்லை என்றால், அது உங்கள் குழந்தையையும் பாதிக்கும்.
குழந்தையை எப்படி பிடித்து கொள்வது என அறிந்து கொள்ளவும் : தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தையை எப்படி பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். தாயும், சேயும், சௌகரியமாக இருப்பது அவசியமானது. நீன்கள் குழந்தையை முறையாக பிடித்துக் கொண்டீர்கள் என்றால், தனக்கு தேவையான அளவு பாலை குழந்தையே குடித்துக் கொள்ளும். மேலும், மார்பு காம்பில் வலி ஏற்படுவதையும் தடுக்க முடியும்.
ரிலாக்ஸான மனநிலை அவசியம் : உங்கள் மனதில் எத்தகைய கவலைகள் இருந்தாலும், பாலூட்ட தயாராகும் போது ரிலாக்ஸ் ஆக இருக்க வெண்டும். மனதுக்கு இதமான மியூஸிக் கேட்பது, குறிப்பாக தாய் - சேய் பாசத்தை வெளிப்படுத்தும் பாடல்களை கேட்பதன் மூலமாக ரிலாக்ஸ் ஆகிக் கொள்ளலாம். மனதில் பாரமின்றி மகிழ்ச்சியாக பாலூட்டும்போது குழந்தைக்கு தேவையான பால் தானாகவே சுரக்கும்.