இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன். இது ரத்த குளுக்கோஸை ஒழுங்குபடுத்துவதோடு, நமது உடலானது சர்க்கரை அல்லது குளுக்கோஸை ஆற்றலாக மாற்ற இன்சுலின் அனுமதிக்கிறது. ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தாலும் சரி மற்றும் குறைவாக இருந்தாலும் சரி, இரண்டுமே மூளையின் ரத்த நாளங்களை பாதிக்க கூடும். எனவே மூளையின் சீரான செயல்பாட்டிற்கு நம் உடல் இன்சுலினை திறம்பட பயன்படுத்துவது அவசியம்.
பிரெயின் ஃபாக் (Brain Fog) : நீரிழிவு பாதிப்பு பிரெயின் ஃபாக் நிலையை ஏற்படுத்துகிறது. பிரெயின் ஃபாக் என்பது விஷயங்களில் கவனம் செலுத்துவதை கடினமாக்குகிறது மற்றும் திடீர் மனநிலை மாற்றங்களை (மூட் ஸ்விங்ஸ்) ஏற்படுத்துகிறது. இவற்றோடு ஞாபக மறதி பிரச்சனையும் ஏற்படும். உடலில் இருக்கும் செல்களை அடைய முடியாத போது சுகர் ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இது ஹைப்பர் கிளைசீமியா (உயர் ரத்த சர்க்கரை) பிரச்சனையை மேலும் அதிகரிக்கிறது.
பிரைன் ஸ்ட்ரோக் (Brain Stroke) : உணவை ஆற்றலாக மாற்றும் உடலின் திறனை நீரிழிவு பாதிப்பதால் பிரைன் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. மூளை திசுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தீவிர நிலையான பிரைன் ஸ்ட்ரோக் சில நேரங்களில் இயலாமை (disability) அல்லது மரணத்தை கூட ஏற்படுத்துகிறது. எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் தங்கள் பாதுகாப்புக்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் பிரைன் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படாமல் இருக்க ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் எடை உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
அல்சைமர் (Alzheimer) : ஆராய்ச்சிகளின்படி, டைப் 1 நீரிழிவு நோயாளிகள் டிமென்ஷியா பிரச்சனையை எதிர்கொள்ளும் அபாயம் அதிகம். அதே போல டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்சைமர் பிரச்சனையை எதிர்கொள்ளும் அபாயம் அதிகம். டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் இன்சுலின் ரெசிஸ்டன்ஸை அனுபவிக்கின்றனர். இதனால் அவர்களின் உடலில் ரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது. அல்சைமர் என்பது அறிவாற்றல் இழப்பு, குழப்பம் அல்லது மறதி நோயின் மிக பொதுவான வடிவம் ஆகும்.
அம்னீசியா (Amnesia) : நீரிழிவு நோய் நினைவாற்றலை கணிசமாக பாதிக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் 5 ஆண்டுகளுக்குள் ஒரு நபர் தனது நினைவாற்றலில் ஏற்படும் சிக்கல்கள் சார்ந்த அறிகுறிகளை வெளிப்படுத்த துவங்கலாம். சில சமயங்களில் பேச்சு குறைபாடுகள் ஏற்படலாம். வயதானவர்களிடம் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.