இரத்தம் உறைதல் ( Blood clot ): இரத்தம் உறைதல் என்பது அதிகப்படியான இரத்தப்போக்கு அல்லது காயம் ஏற்பட்டால் இரத்த இழப்பை தடுக்கிறது. அதாவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், அந்த பகுதியில் இரத்தக் கட்டிகள் உருவாகி இரத்தப்போக்கை நிறுத்தும். இதனால் உடல் அதிக இரத்தப்போக்கை தடுக்கிறது. அந்த இடத்தில் முறையான சிகிச்சை அளித்தபின் இரத்தக் கட்டிகள் உடைந்து இரத்த ஓட்டம் சீராகிவிடும். இது உடல் தனக்குத்தானே செய்துகொள்ளும் செயலாகும். ஆனால் சில நேரங்களில் இது தவறாக மாறக்கூடும். அதாவது ஒரு நபருக்கு உடல் எந்த காரணமும் இல்லாமல் இரத்த நாளங்களில் இந்த இரத்தக்கட்டிகளை உருவாக்கும். இதனால் இதயத்திற்கும், உடலின் பிற பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனின் ஓட்டத்தை சீர்குலைத்து, மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்பை ஏற்படுத்தும்.
மனித இரத்தம் பொதுவாக திரவமாக இருக்கு.ஆனால் ஒரு உறையும் இரத்தமானது ஜெல் போன்ற கட்டிகளாக இருக்கும். இரத்தம் உறைதல் என்பது காயம் ஏற்பட்டால் இரத்தப்போக்கை தடுத்து உயிர் காக்கும். ஆனால் அதுவே எந்த காரணமும் இல்லாமல் உருவாகும்போது, அது உயிருக்கே ஆபத்தானது. அசைவற்ற இரத்த உறைவால் எந்தத் தீங்கும் ஏற்படாது. ஆனால் அது உடைந்து இதயம் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளுக்குள் சென்றால், அது இரத்த ஓட்டம் பாயும் குழாயில் ஆங்காங்கே சிக்கி அடைப்பை உண்டாக்கும். இதனால் இரத்த ஓட்டம் தடுக்கப்ப்டும். அப்படி உங்களுக்கும் இரத்தக் கட்டிகள் உருவாகியிருந்தால் சில பொதுவான அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம். அவை....
கால் மற்றும் கைகளில் உறைதல் : உங்கள் கை அல்லது காலில் உள்ள நரம்புகளில் உருவாகும். இந்த உறைவுக்கு ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ் (deep vein thrombosis (DVT)) என்று அழைக்கப்படுகிறது. இந்த வகையான கட்டிகள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் அவை இதயம் அல்லது நுரையீரலுக்கு எளிதில் பயணிக்கக்கூடும். பாதிக்கப்பட்ட பகுதியில் வீக்கம், வலி, மென்மை, உணர்வு மற்றும் சிவப்பு நிறமாற்றம் ஆகியவற்றை உருவாக்கும். இந்த அறிகுறிகளானது இரத்த உறைவின் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது.
நுரையீரலில் இரத்த உறைவு : கை மற்றும் கால்களின் நரம்பில் ஆழமான உறைவை உண்டாக்கும் இரத்தக் கட்டிகள் நுரையீரல் வரை பயணித்து இரத்த உறைவை ஏற்படுத்துகின்றன. அவை நுரையீரலில் ஏற்படுத்தும் இந்த அடைப்பு pulmonary embolism (PE) என குறிப்பிடப்படுகிறது. அத்தகைய நபர் மார்பு வலி, படபடப்பு, சுவாச பிரச்சினைகள் அல்லது இருமும்போது இரத்தம் வருதல் போன்ற பிரச்னைகளை சந்திக்கலாம்.
அடிவயிற்றில் இரத்தம் உறைதல் : உங்கள் குடலின் நரம்புகளில் கூட இரத்த உறைவு ஏற்படலாம். கல்லீரல் பிரச்சினைகள் அல்லது பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்துவதால் அவை ஏற்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வயிற்றுப்போக்கு, இரத்தக்களரி மலம் உண்டாகும். அதோடு வயிற்றில் கடுமையான வலியை அனுபவிக்கலாம். வீங்கியதைப் போல் உணரலாம்.
நீங்கள் எப்போது மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்? : இரத்த உறைவுக்கான அறிகுறிகளின் ஆரம்பநிலை மற்ற சுகாதார அறிகுறிகளுடன் ஒத்துப்போவதால் ஆரம்பத்திலேயேக் கண்டறிய கடினமாக உள்ளது. சில சந்தர்ப்பங்களில், அறிகுறிகளே தெரியாமல் தீவிரமாகின்றன . சரியான சிகிச்சைக்குப் பிறகுதான், நீங்கள் உண்மையிலேயே இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா.. இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும். உங்களுக்கு இரத்த உறைவு இருப்பதாக உணர்ந்தால் அல்லது ஏதேனும் அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுகவும். இதனால் அவசர நிலைகள், தேவையற்ற அபாய கட்டங்களை தவிர்க்கலாம்.