கசப்பு சுவை மிகுந்ததாக இருந்தாலும் கூட உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்க கூடிய உணவாக இருக்கிறது பாகற்காய். பலருக்கு பிடிக்காத காயாக இருக்கும் பாகற்காயில் அடங்கி இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. அதே சமயம் இதன் நற்பண்புகளுக்காக இதை அடிக்கடி விரும்பி உணவில் சேர்த்து கொள்பவர்களும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே இருக்கிறார்கள். இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் பாகற்காயை ஆரோக்கியமான ஒன்றாக வைத்திருக்கின்றன. வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பீட்டா கரோட்டின் மற்றும் ஃபைபர் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுசாக இருக்கிறது பாகற்காய்.
கசப்பு சுவை மிக்க பாகற்காய் நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. அதே போல பாகற்காயை கூட்டு, பொரியல், குழம்பு, சிப்ஸ் என பல்வேறு வழிகள் மூலம் உணவில் சேர்த்து கொண்டாலும், அதன் ஜுஸை நேரசியாக அருந்துவது பல நன்மைகளை நமக்கு அளிக்கிறது. பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி கீழே காணலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு முக்கியம் : சக்திவாய்ந்த மருத்துவ குணங்களை கொண்ட பாகற்காய் நீரிழிவு தொடர்பான நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க உலகெங்கிலும் உள்ள மக்களால் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பாகற்காய் பெரும்பங்கு வகிப்பது ஆய்வுகள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்க வேண்டிய அவசியம் உள்ள நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் ஜூஸை அருந்துவது மிகவும் நன்மை அளிக்கும்.
கேன்சர் தடுப்பு : கசப்பு பூசணி என்று குறிப்பிடப்படும் பாகற்காயில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதோடு ஒவ்வாமை மற்றும் தொற்றிலிருந்து தடுக்கும் குணம் கொண்ட பாகற்காய் முக்கியமாக புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. பாகற்காய் ஜூஸை சீரான இடைவெளியில் குடித்து வருவது புற்றுநோய் செல்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தி கட்டி உருவாவதை நிறுத்துகிறது. மார்பக, பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்தும் இதன் மூலம் கணிசமாக குறைகிறது.
பாகற்காய் ஜூஸை பற்றிய நன்மைகளின் கூடவே சில சந்தேகங்களும் எழுகின்றன. இது தொடர்பாக மும்பை குளோபல் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் பதில் அளித்துள்ளார். பாகற்காய் ஜூஸின் பயன்கள் மற்றும் நன்மைகள் அந்த ஜூஸ் ப்ராசஸ்டு செய்யப்படும் முறையை பொறுத்தது என்கிறார். அதே போல பாகற்காய் ஜூஸின் பல பண்புகள் வெப்பநிலையைப் பொறுத்தது. எனவே தவறான முறையில் பாகற்காய் ஜூஸ் ப்ராசஸ்டு செய்யப்பட்டால் அது செரிமான அமைப்புக்கு தீங்கு ஏற்படுத்தி வாந்தி மற்றும் வீக்கம் உள்ளிட்ட கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறி இருக்கிறார்.