தண்ணீரை கொதிக்க வைத்துக் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாகளை அழிக்க இது சிறந்த முறையாகும். ஆனால் அப்படி கொதிக்க வைத்த தண்ணீரை சூடாக குடிக்க வேண்டும் என்பதற்காக காய்ச்சிய நீரை மீண்டும் மீண்டும் காய்ச்சி சூடாக்கி குடிப்பது ஆரோக்கியத்திற்கு கேடு தரும் என்பது தெரியுமா..?
இது குறித்து வல்லுநர்களும் எச்சரிக்கை விடுக்கின்றனர். ஏனெனில் நீங்கள் ஏற்கெனவே நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை ஆறிய பின் மீண்டும் கொதிக்க வைப்பதால் அதிகமாக செறிவூட்டப்படுகிறது. இதனால் அந்த தண்ணீரில் உள்ள இரச்சாயனங்கள் மற்றும் உப்பு வகைகளின் அளவு அதிகரித்து நச்சாக மாறுகிறது என பூனேவைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அருணேஷ் தத் கூறுகிறார். அப்படி தண்ணீரை கொதிக்க வைப்பதால் உருவாகும் 5 நச்சு இரசாயனங்கள் மற்றும் உப்பு வகைகளையும் விளக்குகிறார்.
நைட்ரேட்ஸ் : பொதுவாக நைட்ரேட்ஸ் தண்ணீரில் இருப்பது தீங்கானது இல்லை. ஆனால் தண்ணீரை அதிகமாக கொதிக்க வைப்பதாலும், மீண்டும் மீண்டும் கொதிக்க வைப்பதாலும் நன்மை தரக்கூடிய நைட்ரேட்ஸ் தீங்கு விளைவிக்கும் நச்சாக மாறுகிறது. இந்த நச்சு நிறைந்த நைட்ரேட் புற்றுநோய், லுக்கீமியா மற்றும் லிம்போமா போன்ற ஆபத்தான நோய்களை உண்டாக்குகிறது.
ஆர்செனிக் : தண்ணீரில் ஏற்கெனவே இருக்கும் ஆர்செனிக் மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்கும்போது தண்ணீரில் அதன் அளவு அதிகரிக்கிறது. அப்படி அதிகரிக்கும் ஆர்செனிக் உடலுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடியது. குறிப்பாக புற்றுநோய், குழந்தையின்மை, மாரடைப்பு மற்றும் மனநல பாதிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இப்படி நீங்கள் பல நாட்களாக காய்ச்சிய தண்ணீரை பல முறை கொதிக்க வைத்து குடிக்கிறீர்கள் எனில் உடலின் இரத்த ஓட்ட அமைப்பை பாதிக்கும். சருமத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
தண்ணீரின் வேதியியல் மாற்றம் : தண்ணீரை கொதிக்க வைப்பதால் அதில் உள்ள நன்மை தரும் இரசாயனங்கள் மற்றும் ஆவியாகும் கலவைகள் நீங்குகின்றன. இதனால் தண்ணீர் சுவை மட்டும் மாறுவதில்லை. அதோடு அந்த நீர் அதிகமாக செறிவூட்டப்பட்டு தேவையற்ற கெமிக்கல் உருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது. அதோடு அந்த தண்ணீரின் தூய்மையும் பாதிக்கப்படுகிறது.
எனவே தண்ணீரை அதிகமாக கொதிக்க வைப்பதால் மேலே குறிப்பிட்ட உடல் நல பாதிப்புகளை சந்திக்கக்கூடும். குறிப்பாக இப்படி மீண்டும் மீண்டும் காய்ச்சிய நீரை பிறந்த குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்கவே கூடாது என எச்சரிக்கிறார். அதோடு நீங்கள் டீ அல்லது காஃபி போடுவதற்காகவும் காய்ச்சிய சுடு தண்ணீரை பயன்படுத்துவது தவறு. அதன் சுவையையும் மாற்றிவிடும் என்கிறார் மருத்துவர் அருணேஷ். ஏனெனில் தண்ணீரில் இருக்கும் ஆக்ஸிஜன் கொதிக்க வைக்கும்போது ஆவியாகிவிடும் என்கிறார்.