உடலில் சேரும் தேவையில்லாத கொழுப்பை குறைப்பது என்பது சாமானியத்தில் நடக்கிறது காரியம் கிடையாது. அதுவும் வயிற்றை சுற்றி சேர்ந்துள்ள கொழுப்பை என்ன தான் படாதபாடு பட்டு முயற்சித்தாலும், போகவே மாட்டேன் என அடம்பிடிக்கும். வயிற்றின் அடிப்பகுதி, கணையம், கல்லீரல் போன்ற பாகங்களை சுற்றி இருக்கும் கொழுப்புகள் உள்ளுறுப்பு கொழுப்பு என அழைக்கப்படுகிறது.
அவை ஆரம்பத்தில் உணரப்படாவிட்டாலும் அல்லது கவனிக்கப்படாமல் விடப்பட்டாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஆரோக்கியமான உடலுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது. ஆரோக்கியமான உடலைப் பராமரிக்க ஆரோக்கியமான எடை வரம்பிற்குள் இருப்பது அவசியம். மேலும் உள்ளுறுப்பு கொழுப்புகள் பிற்காலத்தில் கடுமையான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை கட்டுப்படுத்துவது இன்றியாமையாதது. அதனை குறைக்க என்னென்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு: கடுமையான உடற்பயிற்சி முறையைப் பின்பற்றுவது எடை இழப்புக்கான மிகவும் ஆக்கப்பூர்வமான முறையாகும். கொளுத்தும் கோடை வெயிலும், கொரோனா தொற்றும் நம்மை வெளியே செல்ல விடாமல் அச்சுறுத்துகிறது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வெளியே சென்று உடற்பயிற்சி செய்வது என்பதும் மிகவும் கடினமான விஷயமாக உள்ளது. இதுபோன்ற சமயங்களில், உடல் எடையை குறைக்க, உணவுக்கட்டுப்பாட்டு முறையை கையில் எடுப்பது மட்டுமே சரியான தீர்வாக இருக்கும்.
2. சாப்பிட வேண்டிய உணவுகள்: கொட்டைகள், மீன், வெண்ணெய், ஆலிவ் போன்ற உணவுப் பொருட்களில் காணப்படும் ஆரோக்கியமான மோனோ சாச்சுரேட்டட் மற்றும் பாலி சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்ட உணவைப் பின்பற்றுவது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க சிறந்த வழியாகும். அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை உண்பவர்களை விட, அதிக கொழுப்புள்ள உணவை உண்பவர்கள் உடல் எடையை குறைக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் மூலம் பரவலாக கண்டறியப்பட்டுள்ளது.
3. ஏன் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்? அதிக கார்போஹைட்ரேட் உணவில் தானியங்கள் அடங்கும், அவை உடலுக்கு விரைவான ஆற்றல் மூலமாகும் மற்றும் இன்சுலின் வெளியீட்டைத் தூண்டி, அதிகப்படியான கலோரிகளை கொழுப்பாக சேமித்து வைக்கச் செய்கிறது. எனவே கொழுப்பு நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளும் போது அவை உடலில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கார்போஹைட்ரேட்டுகளால் உருவான கொழுப்பையும் சேர்த்து குறைக்க உதவுகிறது.
4. கார்போஹைட்ரேட்-இன்சுலின் மாடல்: கார்போஹைட்ரேட்-இன்சுலின் மாடலின் படி, உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது உணவில் கார்போஹைட்ரேட்டைக் குறைப்பது என்பது உடல் இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது எனக்குறிப்பிடுகிறது. இந்த வளர்சிதை மாற்ற செயல்முறை அதிக அளவு இன்சுலின் சுரப்பு உள்ளவர்கள் இடையிலும், உடல் பருமனை குறைக்க விரும்புவோருக்கும் உதவுகிறது. எனவே கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருந்தாலும் கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுக்கு மாறுவது, கொழுப்புகள் குறைவாக இருந்தாலும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவை காட்டிலும் அதிக கலோரிகளை எரிக்க வழிவகுக்கிறது.